ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சுனிசித் என்பவர் மீது நடிகை லாவண்யா திரிபாதி சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் நடிகை லாவண்யா திரிபாதி ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் அளித்துள்ள புகாரில்,
நடிகர், கதாசிரியர், இயக்குநர் என்று தன்னைக் கூறிக்கொண்டு சுனிசித் என்பவர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த் பிரபலங்களுடன் அமர்ந்து தன் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து நடிகையின் இந்தப் புகார் குறித்து ஹைதராபாத் க்ரைம் பிரிவு உதவி ஆணையர் கேவிஎம் பிராசாத் கூறியதாவது:
நடிகை குறிப்பிட்ட விடியோவை ஆராய்ந்தோம். அதில் அவரைப்பற்றி மட்டுமல்லாமல் டோலிவுட் பிரபலங்கள் பலரைப் பற்றியும் சுனிசித் பேசியுள்ளார். தற்போது வரை நடிகை லாவண்யா மட்டும் அவருக்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். இவரது புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
நடிகை லாவண்யா குறிப்பட்ட அந்த விடியோவில், தனக்கும் லாவண்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது எனவும், மூன்று முறை அவர் கர்ப்பமாகி அதை கலைத்துள்ளார் எனவும் சுனிசித் என்ற அந்த நபர் கூறியுள்ளார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள லாவண்யா திரிபாதி, தமிழில் சசிக்குமார் ஜோடியாக பிரம்மண், சுந்தீப் கிஷன் ஜோடியாக மாயவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அத்ரவா ஜோடியாக அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.