இந்திய நாடு கரோனா தொற்றினைக் கையாளும் விதம் குறித்து, தொடர் குரல் எழுப்பி வரும் கமல்ஹாசன், இச்சூழலுக்கேற்ப பாடல் ஒன்றை இயற்றி, பாடி, இயக்கியும் உள்ளார். 'அறிவும் அன்பும்' என்னும் அப்பாடல் நம்பிக்கையையும் நேர்மறை எண்ணங்களையும் மக்களின் மனதில் விதைக்கும். இப்பாடலை கமல்ஹாசனுடன் இணைந்து அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவிஸ்ரீபிரசாத், சங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகின் ஆகியோர் பாடியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். மஹேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ள இந்தப் பாடல், ஏப்ரல் 23ஆம் தேதி அன்று திங்க் மியூசிக் (THINK MUSIC) என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், "முதல் முறையாக ஜூம் செயலியின் மூலமாக ஊடக நண்பர்கள் முன்னிலையில், நானும் ஜிப்ரானும் இப்பாடலை வெளியிட உள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். மானுட சமூகத்தின் மீது நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் விதைத்திட வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் கமல்ஹாசன் சிந்தையில் உதித்த பாடல் தான் 'அறிவும் அன்பும்'. ஒரு தேசமாக இப்பேரிடரையும் நாம் கடந்து, முன்னை விட எழுச்சி அடைவோம் என்கின்ற நம்பிக்கையையும், உந்து சக்தியையும் இப்பாடல் தருகிறது. ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியை உருவாக்குகிறது.
அவ்வழியில் 'அறிவும் அன்பும்' குழுவினரும் துக்கத்திலும் அச்சத்திலும் இருக்கும் மக்களின் வாழ்வில் மகிழ்வினைக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் இப்பாடல். இதற்கு இத்தனை பெரிய கலைஞர்களை ஒன்றிணைத்தது எப்படி என்றால், நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க இயலாத காரணத்தினால் அவரவர் பாடும் பகுதிகளை தனியாக படம் பிடித்தனர்.
இப்படி அவர்களாகவே வீட்டில் இருந்தபடி படப்பிடிப்பு நடந்ததால் இப்பொழுது ஒளிப்பதிவு என்று யாருடைய பெயர் போடுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. உச்சகட்ட தொழில்நுட்ப காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரவர் எடுத்த காணொலிகளை எங்களுக்கு அனுப்பி வைக்க, அதை நாங்கள் ஒன்றாக தொகுத்தோம். நான் பாடல் எழுதினேன், ஜிப்ரான் இசையமைத்தார், மற்ற பாடகர்கள் அனைவரும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில், இந்த நோக்கத்தினைப் புரிந்து உடனே பங்குபெற்றனர். இந்தக் கூட்டமைப்பு, எனது இனத்தின் பெருமையை, இங்கு மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுக்க பறைசாற்றும். கலைஞர்கள் எப்பொழுதும் மக்களிடையே நம்பிக்கையை விதைப்பவர்கள். இப்பாடல் நம் அனைவருக்கும் மிகவும் கடினமான சூழலை கடக்கக்கூடிய வலிமையையும் வல்லமையையும் தரும் என்று உணர்த்தக் கூடியது. தக்கெனப்பிழைக்கும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் இப்பாடல்" என்றார்.