நடிகர் ஜெயம் ரவி 'தனி ஒருவன்', 'அடங்க மறு' போன்ற படங்களில் காவல் துறை அதிகாரியாக வந்து சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக்கேட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'அடங்க மறு' மகத்தான வெற்றியை பெற்று, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஏற்றம் இறக்கத்தை கண்டிருந்தாலும் தரமான நல்ல திரைப்படங்களில் நடித்து நற்பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கோமாளி' எனும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றால் ஜெயம் ரவியின் 24 வது படமாகும். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் முதல் முறையாக நடிக்கிறார். மேலும், யோகி பாபு, சமியுக்தா ஹெக்டே, பசுபதி ஆகியோர் நடிக்கின்றனர்.
'கோமாளி'யாக ஒன்பது வேடங்களில் நடிக்கும் பிரபல நடிகர் - komali
தமிழ் சினிமாவின் லெஜன்ட் நடிகர்களான சிவாஜி, கமலை பின்தொடர்ந்து முதன் முறையாக நடிகர் ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்க இருப்பது கோலிவுட் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் செவாலிய சிவாஜி கணேசன், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு கோமாளி படத்தில் முதன் முறையாக ஒன்பது கதாப்பாத்திரங்களில் ஜெயம் ரவி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 'கோமாளி' திரைப்படம் ஜெயம் ரவியின் கேரியரில் முக்கிய படமாக இருப்பதால், இதில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஜனரஞ்சகமாக, பிரமாண்ட செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. 'கோமாளி' படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவின் கே.எல். எடிட்டிங் செய்வது குறிப்பிடத்தக்கது.