கரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் சின்னத்திரை வெள்ளிதிரை ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்துவருகின்றனர். அதேபோல், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு, திரைப்படங்கள் தயாரிக்க இன்னும் மூன்று மாதங்கள் தேவைப்படும் என்பதால் தயாரிப்பாளர்கள் பலரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் தயாரிப்பாளர்களின் நலன் கருதி, தனது ஊதியத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோவிட்-19 என்ற பெருந்தொற்று நோய் அனைத்து மொழி திரைப்படங்கள், அதுசார்ந்த தொழில்களையும் முடக்கியுள்ளது.
இந்தச் சூழலில் அடுத்து நான் நடிக்கும் படங்களுக்கு எனது ஊதியத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வது என்று முடிவு செய்திருக்கிறேன். இந்தக் கஷ்டமான காலகட்டத்தில் திரைப்படத்துறையைச் சேர்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து, இந்தக் கடும் புயலை வலிமையுடன் எதிர்கொண்டு கரை சேர வேண்டும்.
இந்த நிலை விரைவில் மாறி, திரைத்துறை முன்பு போல் மீண்டும் செயல்படும் என்று நம்புவதுடன், அதற்காக இறைவனை வேண்டுகிறேன். அனைவரும் வீட்டில் இருங்கள் பாதுகாப்புடன் இருங்கள்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த சில நாள்களுக்கு முன்பு நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் மூன்று படங்களின் சம்பளத்திலிருந்து 25 விழுக்காடு ஊதியத்தைக் குறைத்து கொண்டதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐஸ்வர்யா ராஜேஷ் பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!