உலகையே உலுக்கிவரும் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடு முழுவதும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அவரது அந்தப் பதிவில், "தனது நெருங்கிய நண்பர் ஒருவர் சீனாவிலிருந்து டெல்லி வந்து சேர்ந்தபோது டெம்ப்ரேச்சர் செக்கிங் தெர்மல் ஸ்கேனிங் உள்ளிட்ட பரிசோதனைகள் முறையாக நடந்தன.
ஆனால் அங்கிருந்து கேரளாவுக்கு வந்தபோது அது முற்றிலும் முரண்பாடாக இருந்தது கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அதாவது, சீனாவிலிருந்து வந்த எனது நண்பரை மொபைலில் தொடர்புகொண்டேன்.
நடிகர் ஹரீஷ் பெராடியின் பேஸ்புக் பதிவு டெல்லியிலிருந்து கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவரை முறையாக அலுவலர்கள் பரிசோதனை செய்யவில்லை. அவரே தாமாகச் சென்று அலுவலர்களிடம் டெம்ப்ரேச்சர் செக்கிங் தெர்மல் ஸ்கேனிங் உள்ளிட்ட பரிசோதனை செய்யுமாறு கேட்ட பிறகே அங்கிருந்தவர்கள் பரிசோதனை நடத்தினர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாம் கேட்கவில்லை என்றால் அவர்கள் தங்களது கடமையைச் செய்ய மாட்டார்களா எனவும் வேதனை தெரிவித்துள்ள ஹரீஷ் பெராடி, இங்கு சரியான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமான இவர், தமிழில் 'கிடாரி', 'ஆண்டவன் கட்டளை', 'விக்ரம் வேதா', 'மெர்சல்', 'ஸ்கெட்ச்', 'கைதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...'மேல் சாதிக்கு அடங்கி நடப்பது' - சவுக்கடி கொடுத்த கமல்ஹாசன்