கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லகுண்டாபுரம் என்ற ஊரில் 1939ஆம் ஆண்டு பிறந்தவர் கவுண்டமணி. சிறு வயது முதலே படிப்பின் மீது நாட்டமில்லாமல் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். நடிப்பின் மேல் இருந்த தீராத மோகத்தால் தன்னுடைய 15 வயதில் சென்னையில் உள்ள ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார் கவுண்டமணி. நாடகங்களில் நடிக்கும்போது அடிக்கடி கவுண்டர் கொடுத்ததால் நாடக உலகில் இவரை கவுண்டர் மணி என்று அழைத்ததாக கூறப்படுகிறது.
நாடகங்களில் நடித்துக்கொண்டே ஒரு சில கருப்பு வெள்ளை படங்களில் நடித்து வந்தாலும் இவரை அடையாளப்படுத்தியது 16 வயதினிலே திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம்தான். இதனைத்தொடர்ந்து தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணியின் வசனங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. எம். ஆர். ராதாவுக்குப் பின் சினிமாவில் பகுத்தறிவு கருத்துகள் அரசியல் வசனங்கள் நகைச்சுவையில் கலந்து கொடுத்து மக்கள் மனதை பெரிதும் ஈர்த்தவர் கவுண்டமணி.
முதலில் தனியாக நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த அவர் பின்னர் நடிகர் செந்திலுடன் இணைந்து மிகவும் பிரபலமானார். நகைச்சுவை நடிகர், வில்லன், குணச்சித்திர நடிகர் என சுமார் 750 படங்களில் நடித்துள்ள கவுண்டமணி 12 படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
கவுண்டமணி நடித்த காமெடி காட்சிகள், வசனங்கள் இன்றளவிலும் பேசப்படுகின்றன. அவர் நடித்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘அமாவாசை’, ‘விஷமுருக்கி வேலுசாமி’, ‘அஞ்சாத சிங்கம் மருதுபாண்டி’, ஆகிய கதாபாத்திரங்களின் உடல்அசைவும், நடனமும், விழிப்புணர்வு கருத்துகளும் மக்கள் மத்தியில் பிரபலமானவை.