இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்துள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் பங்கேற்று படத்தின் சிறப்பம்சங்களை விவரித்து, படம் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர், 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் குறித்து இயக்குநர் பார்த்திபன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘என்னுடைய 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பெரிய எதிர்பார்ப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.
300 சதவிகிதம் சிந்தனையும், உழைப்பையும் செலுத்தி இந்தப் படத்தை எடுத்துள்ளேன். ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் படத்தை வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. இந்தக் கதையை நடிப்பதற்கு இந்த நடிகருக்கு திறமை இருக்கிறதா என்பது இயக்குனருக்கு தெரியும். அப்படிதான் எனக்கு இந்த கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ரஜினி சார், விஜய் சேதுபதியை மக்களுக்கு பிடிக்கும். என்னையும் அவர்களுக்கு பிடிக்கும். இந்தக் கதையை பொருத்தவரையில் இதிலிருக்கும் அம்சங்கள்தான் மிக முக்கியமானவை. எல்லா வேலைகளையும் நானே பார்ப்பதால் ஒரு தீர்வுக்கு என்னால் வரமுடியவில்லை. படப்பிடிப்பின் போது ஐந்து நாள் இதை நினைத்து அழுதேன். எந்த தைரியத்தில் நாம் இந்த படம் எடுக்கிறோம் என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. பிறகு இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களான ராம்ஜி, சந்தோஷ் நாராயணன், சத்யா, ரசூல் பூக்குட்டி என்று அனைவரும் துணை நின்றார்கள்.
ஒரு சின்ன படத்துக்கு நான் இவ்வளவு செலவு செய்துள்ளேன். படத்தில் சின்ன வார்த்தை, சத்தம் என அனைத்தும் அவ்வளவு துள்ளியமாக படமாக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் படம் பார்க்கும் போது உணர்வீர்கள். இவற்றை ரசிகர்கள் நன்கு ரசிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
கமர்ஷியல் படம் என்று நினைத்துகொண்டு ஏமாறும் தருணம் அதிகம் நடப்பது உண்டு. இந்தப் படம் சவால்கள் நிறைந்த படம். இதை நினைத்து ரசிகர்கள் படம் பார்க்க வர வேண்டும். மற்றபடி படத்தில் அனைத்து சராசரியான காட்சிகளும் உள்ளது’ என்று அவர் கூறினார்.