தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (10.03.2020) விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் சங்கத்திற்குத் தேர்தலை நடத்தி முடிக்க 35 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், அதில் 80% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் பல மாதங்களாக வாக்குகள் எண்ணாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையெல்லாம் தனி நீதிபதி கருத்தில் கொள்ளாமல், தேர்தலை ரத்து செய்துவிட்டதாக அவர் வாதிட்டார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மறு தேர்தல் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். நடிகர் சங்கத்தை நிர்வகிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவுப்படி, தனி அலுவலர் தொடர்ந்து செயல்படலாம் என உத்தரவிட்டனர். விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.