நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா விழிப்புணர்வுக்காக நடிகர் அசோக் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஒரு பொய் சொன்னால் அது காட்டுத் தீப்போல் அனைவருக்கும் பரவிவிடும். ஆனால், அதே ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தால்தான் அது மக்களிடத்தில் சென்றடையும். அதனால் கரோனா வைரஸ் குறித்து நான் கூறுவது என்னவென்றால், கரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் என்று அதைப் குறித்து நிறைய வதந்திகள் உள்ளது. காற்றில் பரவுகிறது. தொட்டால் பரவுகிறது. தும்மினால் பரவுகிறது. இவற்றிலிருந்து நாம் எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளப் போகிறோம் என்பதைவிட மனித குலத்தை பாதுகாக்க வேண்டும். அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட வேண்டும். சுய கற்பித்தலுக்கான ஒரு சூழல் இப்போது நிலவுகிறது. இதுவரை நாம் இந்த பூமியை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது இப்போது தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த பூமியும் தன்னைத் தானே எப்படி சுத்தமாக்கிக் கொள்கிறது என்பதையும் நாம் இப்போது பார்க்கிறோம். சுற்றுச்சூழல் தூய்மையாக உள்ளது. குற்றங்கள் நடைபெறுவது குறைந்துள்ளது. விலங்குகள் அதிக சுதந்திரத்தை உணர்கின்றன. இது போன்ற நிறைய விஷயங்கள், இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஒரு முழுமையான சமூகம் எப்படி வாழவேண்டும் என்பதை இயற்கை கற்றுக் கொடுத்துள்ளது. இதை உணர்ந்து நாம் இப்போது வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.