'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்', 'டிக் டிக் டிக்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’. ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக சாயிஷா நடித்துள்ளார்.
இவர்களுடன் இணைந்து கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஓடிடி தளமான டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் மார்ச் 12ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
கோமாவுக்குச் சென்ற ஹீரோயினின் நினைவுகள் டெடியில் நுழைந்துவிடுகிறது. பின் அதிலிருந்து எப்படி மீண்டும் ஹீரோயினின் உடலுக்கு நுழைகிறது என்பது படத்தின் மீதி கதை.
அதிலும் குறிப்பாக இந்தப் படத்தில் வரும் டெடி குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது. இந்த டெடியை வைத்து கடந்த சில நாள்களாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பிவருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் டெடியின் காட்சிகளை கிராபிக்ஸ் உதவியுடன் எடுத்திருந்தாலும் பல்வேறு காட்சிகளுக்கு டெடி போன்று டூப் போட்டு ஒரு நடிகரைத்தான் நடிக்க வைத்திருந்தனர்.
தற்போது அந்த நடிகரை ஆர்யா, இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். படத்தில் டெடியாக நடித்தவர் நாடக நடிகர் கோகுல். இவர் பொம்மைக்குரிய உடையை அணிந்து டெடியின் உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளார். தலை மட்டும் 3டி முறையில் பெர்ஃபாமென்ஸ் கேப்சர் முறையில் படமாக்கப்பட்டதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் 'டெடி' !