கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட ஆர்யா தமிழில் 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் என்ட்டிரி கொடுத்தார். நடிகர் பிரகாஷ் ராஜுக்கு மகனாகவும், கேங்ஸ்டராகவும் இதில் நடித்திருந்தார். இவர் நடித்த முதல் படமே விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றது. அதிலும் படத்தில் இடம்பெற்றிருந்த 'தீப்பிடிக்க' பாடல் செம ஹிட்டடித்தது.
பின்பு அதே ஆண்டு வெளியான, 'உள்ளம் கேட்குமே', 'ஒரு கல்லூரியின் கதை' என்ற அடுத்தடுத்து வெளியான காதல் படம் மூலம் பெண்களின் மனத்தை வசியம்செய்து, கலாபக் காதலனாக ஜொலித்தார். அதிலிருந்து இவரை தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்றே ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
'ஒரு கல்லூரியின் கதை' படத்தில் நண்பர்களைப் பங்கு என அழைத்து புதிய ட்ரெண்டை உருவாக்கினார். நான் கடவுள், சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், அவன் இவன், மதராசபட்டினம் என 10 ஆண்டுகளில் 25 படங்களுக்கு மேல் நடித்து அசத்தியுள்ளார்.
ஆர்யாவும், சாயிஷாவும் 2018ஆம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தனர். பின்பு அடுத்த ஆண்டே திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இவர்கள் இருவரும் டெடி படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர்.