அமெரிக்காவின் பிரபல மார்வெல் நிறுவனத்தின் காமிக் புத்தகங்களுக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்நிறுவனம் 'கேப்டன் அமெரிக்கா', 'ஹல்க்' போன்ற கதாபாத்திரங்களை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. பிற்காலத்தில் அந்நிறுவனத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் மூலம் சூப்பர் ஹீரோ அனிமேஷன் படங்களைத் தயார் செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் படத்தயாரிப்பதிலும் ஈடுபடத்தொடங்கி, தங்களின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை திரைப்படமாக எடுக்கவும் தொடங்கியதோடு, சூப்பர் ஹீரோ படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர். அந்நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஸ்பைடர் மேன்', 'பென்டாஸ்டிக் ஃபோர்', 'அயர்ன் மேன்', 'தி இன்கிரெடிபில் ஹல்க்', 'தோர்', 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன.
மூன்று கட்டங்களாக இந்நிறுவனம் மொத்தம் 23 படங்களை வெளியிட்டுள்ளது. இதில் இறுதியாக 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படமே இந்த வரிசையில் கடைசிப் படம். இப்படம் உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்தது. தற்போது மார்வெல் சினிமா நான்காம் கட்ட வேலைகளில் இறங்கியுள்ளது.
தோர் படத்தின் நான்காம் பாகமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இப்படத்தை 'தோர் ரக்னராக்' இயக்கிய டைகா வைடிடி இயக்குகிறார். 'தோர்: லவ் அண்ட் தண்டர்' படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மீண்டும் தோர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டெஸ்ஸா தாம்சஸன் வால்கைரீ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தோர் காதலியாக முதல் இரண்டு தோர் பட சீரிஸில் தோன்றிய, நடாலி போர்ட்மேன் இப்படத்தில் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தில் வில்லனாக ’கோர் தி பட்சர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க கிறிஸ்டியன் பேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை மார்வெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை 2022ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கிறிஸ்டியன் பேல், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'தி டார்க் நைட்' படவரிசையில் பேட்மேனாக நடித்தவர். டிசி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தற்போது ’தோர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது டிசி ரசிகர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனை மையமாக வைத்து சமூக வலைதளத்தில் மீம்ஸ்களும் வலம் வருகின்றன.