தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆயிரம் பொற்காசுக்காக விஜய் சேதுபதி செய்யும் காரியம்!

விதார்த் நடிப்பில் உருவான ஆயிரம் பொற்காசுகள் படத்தின் சிங்கிள் ட்ராக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.

ஆயிரம் பொற்காசுகள்

By

Published : Apr 13, 2019, 7:45 AM IST

பிரபு சாலமனின் ’மைனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார் விதார்த். இவரின் எதார்த்தமான நடிப்பும், அற்புதமான கதைத் தேர்வும் ரசிகர்களிடையே நல்ல பெயரை கொடுத்துள்ளது. குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று அசத்திவருகிறார். கமர்சியல் பக்கம் ஒதுங்காமல், மக்களின் வாழ்வியலை எடுத்துச் சொல்லும் படங்களுக்கு இவர் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்.

இந்த வரிசையில் விதார்த் நடித்துள்ள புதிய படம் ஆயிரம் பொற்காசுகள். கிராமத்து பின்னணியில் காமெடி படமாக உருவாகியுள்ளது. விதார்த்திற்கு ஜோடியாக ஜானவிகா நடிக்கிறார். மேலும், பருத்தி வீரன் சரவணன், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, மரியான், பாரதி கண்ணன், செம்மலர், அன்னம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஒரு கிராமத்தில் அரசு திட்டத்தில் கழிப்பிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்போது சோழர் காலத்து ஆயிரம் பொற்காசுகள் கொண்ட புதையல் கிடைக்கிறது. இதை யாருக்கும் தெரியாமல் சொந்தமாக்க விதார்த் கூட்டணி முயற்சிக்கிறது. இந்த விசயம் கிராம மக்களுக்கு தெரியவர, கடைசியில் யார் கைக்கு பொற்காசுகள் செல்கிறது என்று காமெடியாக சொல்லும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த சிங்கிள் ட்ராக்கை, நடிகர் விஜய் சேதுபதி வரும் 14ஆம் தேதி வெளியிடுகிறார். ஆரம்ப காலத்தில் விஜய் சேதுபதியும், விதார்த்தும் கூத்துப்பட்டறையில் ஒன்றாக நடிப்பை கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details