மலையாள எழுத்தாளர் பெனியமின் எழுதிய நாவல் 'ஆடு ஜீவிதம்’(Goat days). மலையாளத்தில் உருவான இந்நாவல், ஆங்கிலம், அரபி, தமிழ், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாவலை அதே பெயரில் படமாக்கவுள்ளார், இயக்குநர் பிளெஸ்ஸி. பிரித்விராஜ் இதில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார்.
கேரளாவில் இருந்து ஒருவர் உதவியோடு சவூதி அரேபியாவுக்குச் செல்லும் நஜீப் முகமது எனும் இளைஞனின் துயர்மிகு நாட்களைப் பற்றி கூறுகிறது 'ஆடு ஜீவிதம்' நாவல். இதில் இன்னும் பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும் உள்ளன.
Prithviraj in aadujeevitham 'ஆடு ஜீவிதம்’ படத்துக்காக 20 கிலோ எடை குறைந்து, அதிக தாடியுடன் காணப்படுகிறார், பிரித்வி ராஜ். வாசகர்களுக்குப் படிக்க படிக்க ஆவலை அதிகரித்த கதை என்பதால், அதன் தன்மை மாறாமல் எடுக்க விரும்புகிறது இதன் படக்குழு. அதனால் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களை, இதில் பயன்படுத்த படக்குழு திட்டமிட்டது. அதன்படி ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதாகத் தகவல் வெளியானது.
தற்போது இதில் ஏ.ஆர். ரஹ்மான் பணிபுரிவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள திரையுலகில் ரகுமான் காலடி எடுத்துவைக்கிறார். 1992ஆம் ஆண்டு சங்கீத் சிவன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான 'யோதா' எனும் மலையாள படத்துக்குத்தான் ரஹ்மான் கடைசியாக இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.