1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டும், கபில் தேவ் தலைமையிலான அணி மேற்கொண்ட பயணத்தை அடிப்படையாகக் கொண்டும் உருவாகிய திரைப்படம் ’83’. உலகக் கோப்பைக்கான பயணத்தில் நடந்த பல சுவையான உண்மைச் சம்பவங்களின் கோர்வையாக இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.
இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியினர் வெற்றி வாகை சூடிய போது நடந்த சில சுவையான சம்பவங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர், அதில், ”உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜூன் 20ஆம் தேதி வரை என்றும், அரை இறுதிச் சுற்று 22ஆம் தேதி எனவும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதற்கான பயணச் சீட்டுகள் இந்தத் தேதிகளுக்கு முன்னதாகவே பதிவு செய்யப்பட்டிருந்தன.
போட்டிகளில் விளையாடிவிட்டு ஜூன் 20ஆம் தேதி இரவு நியூயார்க் செல்ல இந்திய அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தனர். அப்போதுதான் திருமண பந்தத்தில் நுழைந்த இவர்களில் சிலர் தங்கள் மனைவிகளுடன், இந்த வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர். இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுவரை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் இந்திய அணியினரே இதை எதிர்பார்க்கவில்லை.