இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மா’வில் அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன், கலைத்துறையில் 60 ஆண்டுகளை எட்டியுள்ளார். இவர் நடித்த பல படங்களை நாம் இன்றளவும் பார்க்க வேண்டுமென்றால் முழு கவனத்துடன் பார்த்தால் மட்டுமே புரியும். ஒவ்வொரு காட்சிப் படுத்துதலும் கதையை எடுத்துச் சொல்லும்.
அம்மன் கோவில் கிழக்காலே பாடல் காட்சி கமல் நடிப்பில் வெளியான 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தை தமிழ் சினிமா அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. 'சகலகலா வல்லவன்' வெளியானபோது அதன் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. அந்த திரைப்படத்தின் பாடல்கள் பல்சுவை தன்மையை கொண்ட பாடல்களாக அமைந்திருந்ததும் இப்படத்திற்கு ஒரு பலமே. 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் துள்ளலும் கொண்டாட்டமும் நிறைந்து நம்மை குதுகலப்படுத்தும். பொதுவாக தமிழ் சினிமா என்றால் ஒரு ஹீரோ அறிமுக பாடல், டூயாட் பாடல், குத்து பாடல், சோக பாடல் என எழுதப்படாத இலக்கணம் இருந்தது. ஆனால் இந்த இலக்கணத்தை இப்படம் முற்றிலும் மாற்றியது. இப்படத்தில் சோகப்பாட்டே இல்லை.
படத்தின் தொடக்க பாடலான 'அம்மன் கோவில் கிழக்காலே' பாடல் இப்போதும் கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஒலிக்காமல் இருப்பது இல்லை. திருவிழா கொண்டாட்டம் என்றால் இப்பாடல். அதே போல் 'இளமை இதோ இதோ' பாடல் புத்தாண்டுக்குரிய எந்த வாழ்த்தும் இருப்பதில்லை. நாயகனின் திறன்களே எடுத்துக் கூறப்படும். பாடலுக்கு முன்பாக வசனமாக வாழ்த்து சொல்லப்படும். ஆனால், அந்தப் பாட்டு இன்றைக்கும் நமக்குப் புத்தாண்டு வாழ்த்துப் பாட்டுத்தான்.
இளமை இதோ... இதோ.. பாடல் கிராமத்து இளைஞன் வேலு, தாய் தந்தை தங்கை என்ற அன்பான குடும்பம். வேலுவுக்கு அந்த ஊர் பண்ணையாருடன் முரண்பாடு. இந்த முரண்பாடின் விளைவு பண்ணையாரின் மகன் வேலுவின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறான். தன் தங்கையை அந்த பண்ணையாரின் மகனுக்கே கட்டி வைக்க அமெரிக்க நாகரிக இளைஞனாக வேடமிட்டு நடிப்பது. இது கூடவே பண்ணையாரின் மகளுடன் வேலுவுக்கு காதல் என, இடர்கள் வரை நீண்டு இறுதியாக சுபம். இப்படம் முழுக்க முழுக்க கமலின் திறமையை வைத்தே எடுக்கப்பட்டது என்றே சொல்லாம்.
'நிலா காயுது நேரம் நல்ல நேரம்' கணவன் மனைவிக்கு இடையே ஆன ஊடல்களை வரிகள் மூலமும் காட்சிப்படுத்துதல் மூலமும் அழகாக வெளிப்படுத்திருக்கும். அதிலும் குறிப்பாக வேலுவும் காதலி கீதாவாக வரும் அம்பிகாவின் படுக்கை அறை காட்சிகள், கீதாவிற்கு உண்மைகள் தெரியவர, நான் காதலித்த பழைய சாம் ஆகவே நீ மாறிவிடு… நாம் சேர்ந்து வாழலாம் என்று கூறுவார். அதற்கு வேலு அது முடியாது நீ என்னோடு கிராமத்துக்கு வந்து வாழ சம்மதித்தால் தான் நமக்குள் எல்லாம். இறுதியாக கீதாவும் இறங்கி வருவார்.
அப்போது கமல், எனக்கு ஒரு சந்தேகம்… நீ இப்ப வரேன்னு சொல்லி உன் ஆசையெல்லாம் தீர்த்துக்கிட்டு அப்புறம் கிராமத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டீன்னா என கேள்வி கேட்கும்போது, அம்பிகாவின் பதில் ஒட்டு மொத்த மனைவிகளை பிரதிபலிக்கும் வகையில் பதில் அளிப்பார். 'யோவ்… இதெல்லாம் ஒரு நாளில் தீர்ந்து போகிற சமாச்சாரமா?' என்பார் கீதா.
இப்படம் தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வின்றி முழு வேகத்தில் செல்லும். காரணம் படத்தில் வந்த கலைஞர்களின் தேர்வு. கமர்சியலாக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், அனைத்துத் தரப்பு மக்களின் பெரும் ஆதரவை பெற்றது. பன்முகத்தன்மை கொண்ட உலக நாயகனால் தான் 'சகலகலா வல்லவன்' ஆக வலம் வந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெறமுடியும். சகலகலா வல்லவன் என்றும் கொண்டாட்டத்தின் நாயகனே.