2013ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான "ஐந்து ஐந்து ஐந்து" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சைமன் கே.கிங். அதன்பின் 'கொலைகாரன்' படத்தில் இடம்பெற்ற யெளவனா பாடலுக்காகவும் பேசப்பட்டவர், தற்போது தனஞ்ஜெயன் தயாரிப்பில் பிரதீப் இயக்கும் இருமொழிப் படமான 'கபடதாரி' படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, தனது உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டி வந்த சைமன், அதன் பலனாக கடந்த நான்கரை மாதங்களில் 24 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
இது குறித்து சைமன் கே.கிங் கூறுகையில், "ஓய்வின்றி பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஆரோக்கிய வாழ்வு முறை குறித்து நான் அக்கறை கொள்ளவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் கிடைத்த ஓய்வு நேரம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று எண்ணினேன். அதனால், இந்த விடுமுறையை என்னை நானே உருமாற்றிக் கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். நான் முதலில் மூன்று கிலோ எடையைக் குறைக்க வேண்டும் என்ற சிறிய இலக்குடன்தான் ஆரம்பித்தேன். அதன்படி மூன்று கிலோ எடையை குறைத்தேன். அதைத் தொடர்ந்து எனக்கு உடல் எடையை குறைக்க ஒரு உந்து சக்தியாக அமைந்தது. நான்கரை மாதத்தில் 24 கிலோ எடை குறைத்துள்ளேன்.
நண்பர்கள் பலரும் எப்படி இந்த அளவுக்கு எடையே குறைத்தீர்கள் என்று கேட்கின்றனர். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. இந்த முழு ஊரடங்கின்போது, உணவு விடுதிகளும் உணவை டெலிவரி செய்யும் சேவைகளும் இல்லாமல் இருந்த காரணத்தால் வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வீட்டில் சமைக்கப்படும் நமது பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தேன். உணவு வகைகளை வீட்டுக்கே கொண்டுவந்து தரும் செயலிகள் அனைத்தையும் எனது கைபேசியிலிருந்து உடனடியாக அகற்றினேன். அதுவரை அதற்கு நான் அடிமைப்பட்டிருந்தேன். விரும்பி சாப்பிட்டு வந்த ஆடம்பர மற்றும் குப்பை உணவுகளைத் தவிர்த்துவிட்டு வீட்டிலேயே அவ்வப்போது புதிதாக தயாரிக்கும் உடலுக்கு ஏற்ற உணவுகளையே சாப்பிடத் தொடங்கியதுடன் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள ஆரம்பித்தேன்.