'அலைபாயுதே' திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் மாதவன் நாயகனாக நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் 'மின்னலே'. இந்தப் படத்துக்குப் பின் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மாறினார். 2001ஆம் ஆண்டு கெளதம்மேனன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதில், அப்பாஸ், ரீமா சென், விவேக், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களுமே தற்போதுவரை மக்கள் மனத்தில் நீங்க இடம்பெற்றுள்ளன. தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
ரீமா சென்னை காதலிக்க மாதவன் தனது கல்லூரி எதிரியான அப்பாஸ் அடையாளத்தைப் பயன்படுத்துகிறார். இறுதியில் அவர் சந்திக்கும் பிரச்சினைகளே மீதிக்கதை. ட்ரெண்ட் செட்டாக மாறிய இந்தப் படத்தை ரசிகர்கள் இப்போதும் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும்விதமாக இப்படம் இன்று (மார்ச் 26) மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மின்னலே படம் இன்று மீண்டும் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் கருத்துச் சொல்லுமாறு பதிவிட்டுள்ளார்.