’ஆரண்ய காண்டம்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படைப்புக்காக காத்திருந்தனர் கோலிவுட் ரசிகர்கள். ‘அநீதி கதைகள்’ என தலைப்பு, விஜய் சேதிபதி திருநங்கையாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. தியாகரஜன் குமாராஜா, நலன் குமாரசாமி, மிஸ்கின், நீலன் ஆகியோரின் திரைக்கதை, பிஎஸ் வினோத் - ராம்ஜியின் ஒளிப்பதிவு, யுவனின் இசை, சத்யராஜ் நடராஜன் எடிட்டிங், ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஸ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற பெயரில் இதே நாளில் வெளியானது.
காமம் - லீலா
சூப்பர் டீலக்ஸ் படத்தின் மையப்புள்ளியாக காமம் இருக்கிறது. முன்னாள் காதலுடன் திருமணம் மீறிய உறவில் இருக்கும் காதலி, அடல்ட் படம் பார்க்கும் ஒரு மாணவர்கள் கூட்டம்... இந்த இரு சம்பவங்களை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் விரிகிறது.
பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்கு அடல்ட் படம் பார்ப்பது என்பது ‘அந்தியில வானம்’ பாட்டுக் கேட்பது போல ஒரு இனிமையான தருணம். இளையாராஜா இசையோடு அக்காட்சி விரிகிறது... அடல்ட் பட சீடியை வாங்க அவர்கள் கூச்சப்படும் தருணம் எல்லாம் பலரது பால்ய கால நினைவுகளை தூண்டும் விதாமாக அமைந்திருக்கும்.
அடல்ட் படம் பார்க்க ஆயத்தமாகி படத்தை போடுவார்கள், படம் பார்ப்பவனின் அம்மா (லீலா) படத்தில் வர... ஆத்திரத்தோடு அம்மாவை நோக்கி ஓடுகிறான்...
கற்பு - வேம்பு
கணவன் முகில் இல்லாத நேரம் முன்னாள் காதலனுடன் திருமணம் மீறிய உறவில் இருக்கிறாள் வேம்பு, காதலன் அப்போது இறந்துவிடுகிறான். இதிலிருந்து முகில் - வேம்பு தம்பதியினர் எப்படி தப்பிக்கிறார்கள் என நீழும் காட்சிகளில் லிஃப்டில் கரண்ட் கட்டானதும், முகில் ஜனநாயக ஆட்சியை குறை சொல்வான். வேம்பு கரண்ட் வரும் என்பாள், ஆமா இவ பெரிய பத்தினி... சொன்னதும் கரண்ட் வந்துரும் என முகில் சொன்னதும் கரண்ட் வரும்...
’கற்பு’ என்ற சொல்லை வைத்து பெண்கள் மீது நீண்டகாலமாக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறையை இக்காட்சி எளிதாக உடைத்துப் பேசுகிறது. பத்தினி சொன்னால் பச்சை மரம் பற்றி எரியும் என்பது ஸ்டீரியோடைப் தமிழ் வசனம்.