ஆஸ்கர் விருதுகளில் பத்து பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்ட '1917' படம் உருவான விதம் குறித்து 1917 படக்குழு 'த அகாதெமி' ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இயக்குநர் சாம் மெண்டிஸ் இயக்கத்தில் டீன் சார்லஸ் சாப்மேன் (டாம் பிளேக்), ஜார்ஜ் மெக்கே (வில்லியம் ஸ்காஃபீல்டு) நடிப்பில் வெளியானப்படம் '1917'. சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட பத்து பிரிவுகளின் கீழ் இப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முதல் உலகப்போரின் உச்ச கட்டத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் '1917' படத்தின் கதை.
போருக்கு தயாரான போர்வீரர்கள் 1917 ஏப்ரல் மாதம் ஜெர்மனி பிரான்ஸில் இருந்து தனது படைகளை பின் வாங்கிக்கொள்கிறது. இதனால் ஜெர்மனி பயந்துவிட்டதாக எண்ணி, அதை கைபற்ற இங்கிலாந்து திட்டம் தீட்டி பிரான்ஸை நோக்கி ஒரு பட்டாலியன் அளவிலான படையை அனுப்புகிறது. இதனிடையே ஜெர்மனி பதுங்கி இருந்து பாய திட்டம் தீட்டியுள்ளது என்பது இங்கிலாந்துக்கு தெரியவருகிறது.
ஆனால் இந்த விஷயம் தெரியாமல் இங்கிலாந்து ராணுவத்தினரின் ஒரு பிரிவு, போர் செய்ய பிரான்ஸை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருந்தது.
இரு நாட்டுக்கிடையேயான போர் காரணமாக தொலைபேசி வயர்கள் அறுக்கப்பட்டு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், டாம் பிளேக், வில்லியம் ஸ்காஃபீல்ட் ஆகிய இருவரை போருக்காக தயாராகி வரும் வீரர்களிடம் சென்று விஷயத்தை சொல்ல அனுப்பி வைக்கிறது இங்கிலாந்து.
அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மிக அழகான ஒளிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்புடன் பார்வையாளர்களுக்கு விளக்கியுள்ளார் சாம் மெண்டிஸன்.
உலக சினிமாவிலும் சரி ஹாலிவுட் சினிமாவிலும் சரி போர் சார்ந்த படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அதற்கென்று ரசிகர்களும் இருக்கின்றனர்.
கையில்காயத்துடன் வில்லியம் ஸ்காஃபீல்டு ஆனால் இந்தப் படம் ஆஸ்கரில் பத்து பிரிவுகளுக்கு கீழ் பரிந்துரை செய்யக் காரணம், போர்களத்திலிருந்து எட்டிபார்க்கும் மனிதமும், அது தரும் காட்சி அனுபவமும்தான். அதுமட்டுமல்லாது இப்படம் சிங்கிள் ஷாட் என்னும் முறையை பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது தகவல் சொல்ல செல்லும் இரண்டு ராணுவவீரர்களை பின் தொடரும் கேமரா, சில சமயம் அவர்கள் அருகில் வந்து நம்மையும் அவர்களோடு பயணிக்க வைப்பது, பின் அவர்களை முந்தி சென்று முன்னாடி நிற்பது என பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை தருகிறது. பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் புதுமையான விஷயங்களை கையாண்டது போல், புதுமையான சில முயற்சிகளையும் படக்குழு செய்து பார்த்துள்ளது.
அது குறித்து படக்குழு தி அகாதெமி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. படத்தின் ஒரு காட்சியில் போர்வீரர்கள் அதிகமாக காட்டப்பட்டனர். பொதுவாக இதுபோன்று காட்சிகள் சிஜி முறையில் எடுக்கப்படும். ஆனால் இந்தப் படத்தில் அவ்வாறு செய்யாமல் காட்சியில் காட்டப்படும் எண்ணிக்கையிலான நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் உண்மையான நபர்கள். கிட்டதட்ட 475 நபர்கள் அந்தக் காட்சியில் தோன்றியுள்ளதாகவும், விஷுவல் எஃபெர்ட்ஸ் போன்ற எந்த ஒரு டிஜிட்டல் தொழில் நுட்பத்தாலும் அவர்களை உருவாக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்களத்தில் வில்லியம் ஸ்காஃபீல்டு
அதே போல் முதல் உலகப்போரில் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய அதுபோன்ற உடையையே இப்படத்திலும் காஸ்டியூம் டிசைனர் உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சாம் மெண்டிஸின் தாத்தா ஆல்ஃபிரட் மெண்டிஸ் சொன்ன கதைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு திரைக்கதையாக மாற்றப்பட்டதுதான் இந்த '1917'.
பிப்ரவரி 9ஆம் தேதி வழங்கப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் எத்தனை விருது இப்படத்துக்கு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இதையும் வாசிங்க: க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள்: வெற்றியாளர்கள் பட்டியல் முழு விவரம்!