முதல் படமானதுள்ளுவதோ இளமை படத்தில், தனது வயதுக்கு பொருந்தாத வேஷத்தில் அறிமுகமான தனுஷ் என்னும் இளைஞனின் திரைப்பயணம் அவ்வளவுதான், இந்த பையன் தேற மாட்டான் என நினைத்தவர்களே அப்போது அதிகம். தனுஷூம் அப்படிதான் நினைத்திருக்க கூடும். அனைவரது அந்த எண்ணங்களை தனது அடுத்த படமான காதல் கொண்டேன்மூலம் தவிடு பொடியாக்கினார் தனுஷ்.
அனாதை இல்லம் ஒன்றில் வளரும் இளைஞன் வினோத். கோட்டாவில் இடம் கிடைத்து சென்னை பெருநகருக்கு பொறியியல் படிக்கச் செல்கிறான். அங்கு அவனுக்கு அறிமுகமாகும்திவ்யா.
பெருநகரத்தின் பகட்டான வாழ்க்கைக்கு அந்நியாமாகி நின்ற வினோத்தின் வாழ்க்கையில் புதிய ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறது தோழி திவ்யாவின் அக்கறை. அது வினோத்தின் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்க, தோழியின் கைபிடித்து வேகமாக உயரம் தொடுகிறான் வினோத்.
வாழ்நாளெல்லாம் அந்த அன்பு கிடைக்க வேண்டும் என நினைக்கும் வினோத்தின் எண்ணத்திற்கு தடைக்கல்லாகி நிற்கிறது திவ்யா - ஆதி காதல். திவ்யா - ஆதி இணைந்தார்களா, வினோத்தின் காதல் என்னவானது என்பது வழக்கமான தமிழ் சினிமா க்ளைமாக்ஸ்தான் என்றாலும், தமிழ்சினிமாவின் பலமாற்றங்களுக்கு இந்தப் படம் அடித்தளமிட்டது.
பொறியியல் படிப்பு பிரபலமாகியிருந்த அந்த காலக்கட்டத்தில், பி.இ., மோகத்தில் கல்லூரிக்குள் நுழைந்த கிராமப்புற மாணவர்களின் மனநிலையை வினோத் கதாபாத்திரம் கனகச்சிதமாக கடத்தியது. பின்னாளில் இவன் நம்ம பக்கத்து வீட்டுப் பையன் என்ற தனுஷின் பிம்பத்திற்கு அச்சாரமிட்டது வினோத்தான்.
பள்ளிப்பருவக் காதலையும் அதன் விளைவுகளையும் பக்குவம் இல்லாமல், கவர்ச்சியாக கையாண்டிருந்த இயக்குநர் செல்வராகவன், அந்த அவப்பெயரை காதல் கொண்டேன் மூலம் துடைத்துக் கொண்டார். அன்புக்கு ஏங்கி மனநிலை பிறழும் இளைஞனின் கதையை வைத்து ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை அவர் நிரூபித்திருப்பார்.
சைக்கோ காதல் பட வரிசையில் இருந்து காதல் கொண்டேன் படத்தை காவியமாக்கிய விஷயங்கள் பாடல்களும், இசையும். மழையில் நனைந்தபடி வினோத் ஆதியுடன் மோதும் காட்சியின் பின்னணியிசை, தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த பின்னணியிசைகளில் ஒன்று. இன்றும் 90'ஸ் கிட்ஸ்களின் அலைபேசி ஒலியாகவும் அலங்கரித்து வருகிறது.
செல்வராகவன் யுவன்சங்கர் ராஜா தேவதையை கண்டேன்... பாடல் அன்றைய இளைஞர்களின் ஆஸ்தான பாடல்களில் ஒன்றாகவே இருந்தது. ”தோழியே ஒரு நேரத்தில் என் தோளிலே நீ சாய்கையில் பாவியாய் மனம் பாழாய் போகும்” என்ற வரிகளில், இளைஞர்கள் அனைவரும் தங்களுது மன அழுக்குகளை கழுவிச் சுத்தம் செய்துகொண்டனர்.
முதல் படத்தில் விமர்சனங்களோடு வெற்றியை ருசித்திருந்த இளைஞர் பட்டாளம் ஒன்று, காதல் கொண்டேன் மூலம் மேலும் சிலரை இணைத்து தங்களை நிரூபிக்க போராடி, அதில் வெற்றியும் அடைந்திருந்தனர். அந்த வெற்றி தமிழ் சினிமாவின் மேக்கிங், கதை சொல்லும் முறைகளில் பெரிய மாற்றங்களையும் விதைத்தது.
கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி காதல் கொண்டேன் வெளியானது. படம் வெளியாகி இன்று பதினெட்டு ஆண்டு ஆகிறது. இப்போது பார்க்கும்போதும் இந்த படம் காதல் காவியமே...
இதையும் படிங்க:சுப்ரமணியபுரம்: துரோக சங்கிலியின் சாட்சி