செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'புதுப்பேட்டை' திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படங்களில் 'புதுப்பேட்டை' படத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. புதுப்பேட்டைக்கு முன், புதுப்பேட்டைக்கு பின் என கேங்ஸ்டர் திரைப்படங்களை வரையறுக்கலாம் என சில சினிமா விமர்சகர்கள் சொல்வதுண்டு. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்த இத்திரைப்படம், 2006 மே 26 அன்று வெளியானது.
'புதுப்பேட்டை' வெளியான சமயம் அப்படத்துக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதற்கு முந்தைய செல்வராகவன் படம்போல் இத்திரைப்படம் இல்லை, கேங்ஸ்டர் கதையை ஜவ்வாக இழுத்திருக்கிறார் என எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. எனினும், படம் வணிக ரீதியாக தோல்வியைச் சந்திக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை பார்த்தவர்கள், இதனை பெரிதும் கொண்டாடத் தொடங்கினார்கள். அதன்பிறகு மீண்டும் இந்தப் படத்தை பார்த்துவிட்டு மிகச்சிறப்பான அளவில் விமர்சனம் எழுதிய சினிமா விமர்சகர்களும் இங்கு இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முக்கியமான ப்ளஸ்ஸாக பார்க்கப்பட்டது யுவனின் இசை, ஹாலிவுட் ரேஞ்சில் இசையமைத்திருக்கிறார் எனப் பலரும் பாராட்டினர்.
தனுஷ் திரையுலகப் பயணத்தில் இது மாபெரும் திருப்புமுனையாக அமைந்த படம். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தனுஷிடம், ’நீங்கள் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பதுதான், வாழ்நாள் கனவு என்றால் எந்தக் கதாபாத்திரத்தை சொல்வீர்கள்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. தனுஷ் சற்றும் யோசிக்கமால், அப்படி கதாபாத்திரம் எதுவும் இனி இல்லை, நான் ஏற்கெனவே அதில் நடித்துவிட்டேன், அதுதான் புதுப்பேட்டை 'கொக்கி குமார்' என்றார். கொக்கி குமார் என்ற கதாபாத்திரமாக தனுஷ் வாழ்ந்திருப்பார். ஸ்கூல் பையன், போதை பொருள் விற்பவன், கேங்ஸ்டர், அரசியல்வாதி என தனுஷின் கதாபாத்திர மாற்றங்களை மையமாகக் கொண்டு கதை விரியும்.
புதுப்பேட்டை - survival of the fittest
வலியது பிழைத்து வாழும் என்ற டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுதான் இப்படத்தின் மையக்கரு என செல்வா ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரு அறிவியல் கோட்பாட்டை மையமாக வைத்துதான் செல்வராகவன் இந்தக் கதையை எழுதினாரா? என்று அவரிடம் கேட்டால்தான் தெரியும். ஆனால், புதுப்பேட்டை படம் பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. அந்த வகையில் அது தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக காலம் கடந்து நிற்கிறது.
அம்மாதான் உலகம் என மகிழ்ச்சியாக சுற்றித் திரியும் ஸ்கூல் பையன் குமாரு, தன் தந்தையால் தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்க்கிறான். தந்தையை விட்டு தப்பித்து ஓடி, பிழைத்துக் கிடந்தால் போதும் என பிச்சை எடுக்கத் தொடங்குகிறான். தவறுதலாக ஒரு கேங்ஸ்டர் கும்பலுடன் குமாரை போலீஸ் கைது செய்கிறது. அதன்பிறகு அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை.
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே..