தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வசந்தபாலனின் ‘வெயில்’ நிழலும், நீரும் தரக்கூடியது - இயக்குநர் வசந்தபாலன்

தனக்கென்று உறவுகள் இல்லாமல் இருப்பவர் மட்டும் அநாதை இல்லை. உறவுகள் என்று எல்லோரும் இருந்தும் தனியாக இருப்பவரும் அநாதைதான். முருகேசன் அந்த கொளுத்தும் வெயிலில் அப்படிப்பட்ட அநாதையாகத்தான் திரிந்துகொண்டிருந்தான்.

வெயில்
வெயில்

By

Published : Dec 9, 2020, 7:15 PM IST

Updated : Dec 9, 2020, 7:48 PM IST

வாழ்க்கையில் ஒருவனுக்கு தோல்வி ஒரு பகுதியாக இருந்தாலே தாங்கிக்கொள்ள முடியாத விரக்தி குடியேறும். ஆனால், சிலருக்கு வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை தோல்வியே ஆக்கிரமித்துக்கொள்ளும்.

அதிலிருந்து வெளியேறவே முடியாதபடி தோல்வி அவனைச் சுற்றி வலை பின்னி வைக்கும். அந்த வலை கொடூரமானது. நிம்மதியாக வாழவும் முடியாமல், மரணிக்கவும் மனமில்லாமல் அலைந்து கொண்டிருக்கும் ஒருவனது மனநிலை பெரும் மனஉளைச்சலையும், ஏன் இப்படி இருக்கிறோம் ஏதேனும் தமக்குத் தெரியாமல் குற்றம் செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியையும் தரக்கூடியது.

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களின் கதை ஏராளம் வந்திருக்கின்றன. ஆனால், தோல்வி அடைந்தவனின் கதை வருவதெல்லாம் கோலிவுட்டில் அரிதானது. அப்படியே வந்தாலும் அந்தக் கதை வெற்றி அடைவது அவ்வளவு எளிதல்ல. அப்படி வாழ்க்கை முழுக்க தோல்வி அடைந்தவனின் கதையைச் சொல்லி அந்தக் கதை வெற்றி பெற அக்கதையை எழுதியவர், தோல்வியின் அனைத்து பக்கங்களையும் பார்த்திருக்க வேண்டும். வசந்தபாலன் அப்படிப்பட்டவர்.


ஆல்பம் என்ற படத்தின் மூலம் தோல்வியின் அனைத்து பக்கங்களையும் பார்த்தவர், வசந்தபாலன். அந்த வசந்தபாலன் தன்னை மீண்டும் நிரூபித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில் எந்த ஒரு இயக்குநராக இருந்தாலும் தனது அடுத்த கதையை எந்த ரிஸ்க்கும் இல்லாமல் பாசிட்டிவ் மோடில்தான் எழுதியிருப்பார். ஆனால், வசந்தபாலனோ தன்னை நிரூபிக்கத் தான் உணர்ந்த தோல்வியையே கையில் எடுத்தார்.

வாழ்க்கையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் தோல்வியையும், இழப்பையும் சந்தித்த வெயில் முருகேசன்கள், இப்போதும் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு மூலையிலாவது வெற்றியின் சுவை எப்படி இருக்கும் என்பதை ருசித்துப்பார்த்திட வேண்டுமென்பதுதான் அதிகப்பட்ச எதிர்பார்ப்பு. சினிமாக் கொட்டகையை வாழ்க்கையாகவும், பள்ளியாகவும், கோயிலாகவும் பார்த்த முருகேசன் தனது தந்தை மாயாண்டித் தேவரால் நேர்ந்த அவமானம் காரணமாக, நகையைத் திருடிக்கொண்டு வென்றுவிட்டுத்தான் மீண்டும் இங்கு வரவேண்டுமென்று ஓடினாலும் அவனை தோல்வி துரத்திக்கொண்டே இருக்கிறது.

திரையரங்கு இடிக்கப்பட்டு, காதலி உயிரிழந்து வாழ்க்கையில் அடுத்து எங்கு செல்வது என்று தெரியாமல் மீண்டும் சொந்த ஊருக்கே வரும் முருகேசனின் வலியை உணர்ந்துகொள்ள ஒரு நாளாவது முருகேசனாக வாழ்ந்திருக்க வேண்டும்.

வீட்டை விட்டு ஓடி சென்ற ஒருவன் தன்னுடைய அடையாளத்தை தொலைத்துவிட்டு, வீட்டில் இருப்பவர்களுக்கு நினைவிலிருந்து விலகிப்போன பிறகு, மீண்டும் அந்த வீட்டுக்கே அவன் வருவது மிகப்பெரிய வலி. அப்படிப்பட்ட நிலையில் முருகேசன் வீட்டுக்கு வெளியே வந்து நிற்கும்போது வெக்கையை கூட்டியிருந்த வெயில், ஈரத்தை சுரந்திருக்கும். குறிப்பாக, விருதுநகர் டீக்கடையில் தன்னை தன் தம்பி கதிரிடம் முருகேசன் அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சியை இப்போது பார்த்தாலும் எப்போதோ நாம் தொலைத்த உறவுகளை மீண்டும் தேடி போக மனம் சொல்லும்.


ஓடிப்போனதை தவிர வீட்டுக்கு எதுவுமே செய்யாத முருகேசன் குற்றவுணர்ச்சியில் அந்த வீட்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும்போதும், தன்னுடைய தங்கைகளிடம் தனது தம்பி தன்னை அறிமுகம் செய்துவைக்கும் தர்மசங்கடமான சூழலிலும் பசுபதி, முருகேசனாக வாழ்ந்திருப்பார்.

தம்பியும், தாயும் தரும் ஆசுவாசத்தைத் தவிர, வேறு யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கும் முருகேசனுக்கு பெரும் ஆறுதலாக இருப்பது அவனது சிறுவயது காதலி. கையில் பெண் பிள்ளையோடு கணவரைப் பிரிந்து வாழும் அவளது வீட்டுக்கு முருகேசன் போகும்போதெல்லாம் நம்முடைய பழைய காதல் நினைப்பு நம்மை தொற்றிக்கொள்ளும். எல்லோரும் அப்படிப்பட்ட ஒரு காதலை கடந்துதானே வந்திருப்போம்.

தங்கைகள் என்னை அண்ணன் என்று அழைக்க வேண்டும், அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று முருகேசன் தனது சிறு வயது காதலியிடம் கூறுவதில், இந்த இடைப்பட்ட காலத்தில் முருகேசன் இழந்ததும், இனி முருகேசன் அவர்களிடம் எதிர்பார்ப்பதும் இது ஒன்றைத்தான் என்பதை புரிந்துகொள்ள முடியும். தனக்கென்று உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள் மட்டும் அநாதை இல்லை. உறவுகள் என்று எல்லோரும் இருந்தும் தனியாக இருப்பவர்களும் அநாதைதான். முருகேசன் அந்த கொளுத்தும் வெயிலில் அப்படிப்பட்ட அநாதையாகத்தான் திரிந்துகொண்டிருந்தான்.

ஒருவன் ஒருமுறை திருடிவிட்டால் அவனை இந்த உலகம் கடைசிவரை திருடனாகத்தான் பார்க்கும். அவன் திருடியதற்குப் பின் இருக்கும் சூழலை எப்போதும் இந்த உலகம் பார்க்கத் தயாராக இருக்காது. ஆனால், அவனது வீடு மட்டும்தான் ஒரு அளவேனும் அவன் திருடியதற்கான சூழலைப் புரிந்துகொண்டு, அந்தச் சூழலை மாற்றி அமைக்க முயற்சிக்கும். இனி, தன்னுடைய உலகம் வீடுதான் என்று வந்த முருகேசனுக்கு, தங்கையின் நகைகளை காணவில்லை என்ற நேரத்தில் அந்த வீடே திருட்டுப் பட்டம் கட்டும்போது, தன்னுடைய கடைசி உலகமும் இருண்டுவிட்டது என்ற ஏமாற்றமும், விரக்தியும் முருகேசனை மட்டுமில்லை ரசிகர்களையும் நிலைகுலைய செய்துவிடும்.

'வெயில்' திரைப்படத்தைப் பொறுத்தவரை கதைத் தேர்விலிருந்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வுவரை மிகப்பெரிய ரிஸ்க்கை எடுத்திருப்பார், வசந்தபாலன். அதுவரை வில்லனாக மட்டுமே பார்க்கப்பட்டுவந்த பசுபதியை உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததற்கு அவர் அந்தக் கதை மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம். கதை மட்டும் சரியாக இருந்தால்போதும், இங்கு வில்லனும் கதாநாயகன்தான், தோல்வியும் வெற்றிதான் என்பதை வசந்தபாலன் கோலிவுட்டுக்கு உணர்த்தியிருக்கிறார்.

முக்கியமாக படத்தின் இசையமைப்பாளர். வெயில் போன்ற கனமான கதைகளுக்கு குறைந்தபட்சம் பத்து படங்களுக்காவது இசையமைத்திருப்பவரைத்தான் ஒரு இயக்குநர் தேடிப் போயிருப்பார். ஆனால், வசந்தபாலன் ஜி.வி. பிரகாஷ் என்ற டீன் ஏஜ் பையனை அறிமுகப்படுத்தினார். அதற்கு நியாயம் செய்வது போல் ஜி.வி. பிரகாஷும் தனது பாடல்களாலும், பின்னணி இசையாலும் மொத்த படத்தையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார். அந்த சிறு வயதில் எப்படித்தான் இவ்வளவு பெரிய கனத்தை ஜி.வி.பி தாங்கினாரோ. இந்தப் படத்திலிருந்துதான் ஜி.வி.பிரகாஷ் - நா. முத்துக்குமார் என்ற மேஜிக் ஆரம்பித்தது.

மழையை, ரம்மியமான சூழலை பாடலாசிரியர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது இந்தப் படத்தில்தான் ‘வெயிலோடு விளையாடி’ என்ற பாடல் மூலம் வெயிலையும், வெக்கையான சூழலையும் கொண்டாடலாம் என்று முத்துக்குமார் கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். இன்றுவரை இந்தப் பாடல் கிராமத்தை தொலைத்து நகரத்தில் இருப்பவர்களை மீண்டும் தங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும்.குறிப்பாக, உருகுதே மருகுதே பாடலில், 'ஊரவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்' என்ற வரிகளில் முத்துக்குமார் முருகேசனின் வலியைக் கடத்தியிருப்பார்.

தனக்கு நிச்சயதார்த்தம் ஆன சமயத்தில் இந்தப் பாடலை எழுதினார் என்பதாலோ, “நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பார்க்கிறேன், அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்பு கதை பேசி பேசி விடியுது இரவு” என பாடலின் ஒவ்வொரு வரியிலும் காதலின் உச்சம் தொட்டிருப்பார் முத்துக்குமார்.

தங்கைகள் என்னை அண்ணன் என்று அழைக்க வேண்டும், அம்மாவின் மடியில் படுக்க வேண்டும் என்ற முருகேசனின் குறைந்தபட்ச கோரிக்கை அவன் உயிரிழந்தபிறகுதான் அவனுக்கு கிடைக்கும். அதனை இப்போது பார்த்தாலும் அனைவரின் மனதும் ஒருநிமிடம் ஆடிப்போகும். இனி, முருகேசன்களை அலட்சியப்படுத்தக்கூடாது என்ற அக்கறை பிறக்கும். முக்கியமாக, திரைப்படம் முழுக்க முருகேசனை சபித்த அவனது தந்தை எங்கள் குடும்ப விளக்கு என்று போஸ்டர் ஒட்டிவிட்டு நடந்துசெல்லும்போது எழும் உணர்வை எழுத்தில் அடக்கிட முடியாது.

வெயில் பொதுவாக வெக்கை தரும். ஆனால், இந்த வெயில்தான் எப்போதும் முருகேசன்களுக்கு நிழலையும், முருகேசன்களை கண்டுகொள்ளாமல் இருந்தவர்களுக்கு நீரையும் கொடுக்கும். அப்படிப்பட்ட வெயிலைக் கொடுத்த வசந்தபாலனுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்!

Last Updated : Dec 9, 2020, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details