இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் சென்னை-600028. சென்னைவாசிகளின் வாழ்வியலையும் கிரிக்கெட் விளையாட்டை பிரதான பொழுதுபோக்காக வைத்திருக்கும் இளைஞர்களின் ரசனையை மிக அழகாக இப்படத்தில் அவர் காட்சிப்படுத்தியிருந்தார். வெங்கட் பிரபு தனது முதல் படத்தில் சூப்பர் சிக்ஸர் அடித்து ரசிகர்களின் மனதையும் வென்றார். எஸ்.பி.சரண் தனது நண்பனின் லட்சியத்தை நிறைவேற்றவே சென்னை 600028 படத்தை தயாரித்தார்.
இப்படத்தில், நடித்த ஜெய், நிதின் சத்யா, சிவா, விஜய் வசந்த், இனிகோ பிரபாகரன், அரவிந்த் ஆகாஷ், விஜய லக்ஷ்மி, பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ் ஆகியோர் அனைவரும் புதுமுகமாக படத்தில் அறிமுகமானார்கள். இப்படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதித்து இதில் நடித்த அத்தனை பேருக்கும் முகவரியை தேடி தந்தது. யுவன்தான் படத்தின் கதாநாயகனாக திகழ்ந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 12 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அந்த படத்தின் மீதான அதீத காதல் இன்னும் குறையவில்லை. சென்னை- 600028 நமது வாழ்க்கையில் கடந்து போகக் கூடிய சாதாரண நாட்களை போன்று தொடங்கி நட்பு, கிரிக்கெட், காமெடி காதல் என அனைத்தையும் ஒரே படத்தில் பயணிக்க வைத்து ஒரு திருவிழாவைப்போல் கொண்டாடி மகிழ வைத்தது. தமிழ் சினிமாவில் ஒரு இளைஞர் பட்டாளம் களம் இறங்கிய நேரம் அது... புயல் போல் சூறாவளியாக விஸ்வரூபம் எடுத்தது அந்த பட்டாளம்.
படம் முழுக்க கிரிக்கெட் கிரிக்கெட் அது தவிர வேறு எதுவும் இல்லை... ஒரு அணி இருந்தால் அதற்கு எதிரி இருக்க வேண்டும் அப்படி ஷார்க்ஸ் அணிக்கு ஆஸ்தான எதிரி ராயபுரம் ராக்கர்ஸ் அணிதான். பார்க்கின்ற இடத்தில் எல்லாம் சண்டை, வாய்த்தகராறு அந்த அணியைக் கண்டாலே ஷார்க்ஸ் அணியினருக்கு பிடிக்காது. கதையின் நாயகன் சிவா, ஷார்க்ஸ் அணியின் தூண் அவர்தான். பிரேம்ஜி வரும் காட்சிகளில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. இளவரசன் இந்த இளைஞர்களின் சித்தப்பா, மாமா, அண்ணனாக வந்து கலகலப்பூட்டுவார். கிரிக்கெட் விளையாட மைதானம் இல்லாமல் பள்ளி படிக்கும் மாணவர்களிடம் ஷார்க்ஸ் அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடி தோற்றுப்போவதும், அதை சரிக்கட்ட தனது தந்தை ஆசை ஆசையாக வாங்கி தந்த பேட்டை விஜய் வசந்த் இழக்கும் காட்சி இதுவரை தமிழ் சினிமா கண்டிராத திருப்புமுனை காட்சிகளாகும். படத்தின் மொத்த உயிரும் யுவனின் இசை, காட்சிக்கு காட்சி ரசிகர்களை கட்டிப்போட்டது. குறிப்பாக சரோஜா சாமா நிக்காலோ... பாடல் டீக்கடை முதல் டிஸ்கோதேக் வரை பிரபலமானது.
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து படங்கள் வருவது அரிது. இந்திய அணியைத் தவிர சினிமாவில் காணாத புதிதாக களம் இறங்கிய ஷார்க்ஸ் அணி சினிமா ரசிகர்களின் நீண்டநாள் ஏக்கங்களை பூர்த்தி செய்தது. அந்த நேரத்தில் இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறி கிரிக்கெட் ரசிகர்களின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது. இந்திய அணி வெளியேறியதால் இந்திய ரசிகர்கள் துவண்டுபோய் கிடந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் களமிறங்கிய சென்னை-28 திரைப்படம் எல்லா சென்டர்களிலும் சிக்சர் மழை பொழிந்தது. ரசிகர்கள் கூட்டம் அலைமோதின. இந்திய அணிக்கு கிடைக்காத உலகக்கோப்பையை சென்னை -28 திரைப்படம் தீர்த்து வைத்தது. இப்படம் வெற்றிபெற்ற அந்த வருடம்தான் இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்று அசத்திக்காட்டியதை மறக்க முடியாத பசுமை நினைவுகள்.
இதைத்தொடர்ந்து வந்த வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா போன்ற படங்களுக்கு சென்னை -28 தமிழ் சினிமாவின் அச்சாரமாகும். நாமும் இந்த 12ஆம் வருடத்தை கொண்டாடி மகிழ்வோம்.