சாதி எனும் மிருகத்தின் கொடூர முகத்தை மிக நுணுக்கமாக அதன் அருகிலிருந்து பதிவுசெய்த பரியேறும் பெருமாள் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. படம் வெளியான சமயத்தில் பல்வேறு விவாதங்களை சமூகத்தில் ஏற்படுத்தியது. பரியேறும் பெருமாள் வெறும் சாதிய ஆதிக்கத்தை மட்டும் சொல்லிவிட்டுச் செல்லவில்லை; தமிழ்மொழிக் கல்வி மாணவர்களின் மீதான சமுதாயத்தின் ஏளனப் பார்வை, நாட்டுப்புற கலைஞர்கள் மேலான பாலியல் சுரண்டல் என ஒவ்வொரு காட்சியிலும் சமூகத்தின் முகமூடியைக் கிழித்து நிர்வாணப்படுத்தியது.
’நான் நாயா தான் இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கற வரைக்கும்’ பரியேறும் பெருமாள் படத்தின் இறுதிச் சண்டைக் காட்சியில் ஜோவின் அப்பாவிடம் பரியன் கூறும் ஒரு வசனம் உணர்த்தும் நிஜங்கள் ஏராளமானவை."உன் பொண்ணு காலைல உன்ன பாத்து சிரிச்சாளா, அப்பானு கூப்ட்டாளா இதெல்லாம் நான் உனக்கு போட்ட பிச்சை", என்று படத்தில் பரியன் கூறும் இந்த வரிகளைத்தான் நிஜ பரியன்கள் இங்கு உண்மையாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தளவுக்கு ஒடுக்கப்பட்டனின் உளவியலை தனக்கேற்றவாறு கட்டமைக்கும் தந்திரத்தை நீண்ட காலமாக ஆதிக்க சாதிகள் கையாண்டு வருகின்றன.
சாதிக்கு ஒரு இழுக்கு என்றால் பெற்ற மகளைத் துடிதுடிக்கக் கொன்று தற்கொலை என நாடகமாடுவது, பெண்களுக்கு மொட்டையடிப்பது, ஊர்ப்பெயரைக் கேட்டு சாதியை கண்டுபிடித்து தீண்டாமையை கடைப்பிடிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் சீழ் படிந்த சமூகத்தின் புண்களை அப்பட்டமாக வெளிக்காட்டியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
’பரியேறும்’ மாரி செல்வராஜ் தன் தந்தையின் வேட்டியை உருவி அவமானப்படுத்தியவர்களைப் பழிவாங்க எண்ணி பரியன் கத்தியை கையிலெடுக்கும் சமயம், பரியனின் அம்மா அவனை இடைமறித்து "உங்கப்பனுக்கு இன்னைக்கு நேத்தா இது நடக்குது, எத்தன தடவ அவர பொம்பளனு நினச்சி தூக்கிட்டு போய் பாவாடையைத் தூக்கி பாத்துட்டு ஆம்பளனு தெரிஞ்சதும் அம்மணமா விட்டுட்டு போய்ருகானுங்க" என்று அவர் சொல்கின்ற இடத்தில் தன் சாதி பெண்ணை வேறொருவன் தொடக் கூடாது என்று எண்ணும் அதே ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட பெண்கள்(அவர் ஆண் என தெரியாமலேயே) மீது நிகழ்த்தும் பாலியல் வெறியை வெட்டவெளிச்சமாக்கியிருப்பார் இயக்குநர்.
கத்தியை எடுத்தது பரியன் அல்ல, சமூகம்தான் அதே காட்சியில் பரியனின் நண்பன் ஆனந்த், "பரியா இங்கிலிஷ் பரிட்சை ரெண்டுலயும் நீ பாஸ் ல" என்ற வசனத்தின் மூலம் கத்தியைத் தூக்கிய பரியனுக்குப் புத்தியை கொடுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார் மாரி.இந்த இடத்தில் ஒருவேளை பரியன் கத்தியை எடுத்துப் புறப்படும்போது அம்மாவும் அவன் நண்பனும் அங்கு வந்திருக்காவிட்டால், பரியன் கண்டிப்பாக ஒருவனையாவது குத்தியிருக்கக் கூடும். அவ்வாறு குத்தியிருந்தால் பரியனை ஒரு சாதிவெறியனாக நீங்கள் நினைத்திருப்பீர்களாயின் உண்மையில் உங்கள் மனதிலிருந்து சாதி எனும் அழுக்கு முழுமையாகப் போகவில்லை என்று பொருள்.
திருப்பி அடித்தால் வன்முறையா? ஒரு நிமிடம் பரியனாக இருந்து யோசிப்போம்... நீங்கள் படிக்கக்கூடாது என்று சக மாணவனே சாதியால் தடுத்தால்...நம்முடைய நெருங்கிய நண்பன் வீட்டு விஷேசத்திற்கு ஆசையாகச் செல்லும்போது சாதியால் புறக்கணிக்கப்பட்டால்.... உங்கள் மீது சிறுநீர் கழித்து விரட்டியடித்தால்... உங்கள் தந்தையை அவமானப்படுத்தினால்... இத்தனையும் தாண்டி உங்களைக் கொலை செய்யத் துணிந்தால் என்ன செய்வீர்கள்? உணர்ச்சி வேகத்தில் நீங்கள் கொலை செய்தால் அது சாதிவெறியா?... இப்போது பரியன் சாதிவெறியனா இல்லையா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்(now The Ball is in your court).
அவமானங்கள், புறக்கணிப்புகள் ஒருவேளை பரியன் குத்தியிருந்தாலும் அது சாதிவெறி அல்ல. இத்தனை அவமானங்களையும் தாண்டி பரியன் கொலை செய்யாமலிருந்தது ஏன், என உங்களுக்கு தோன்றியதுண்டா? பரியன் கொலை செய்ய துணியும்போது, ஜெயிலுக்கு சென்றால் அம்மா அனாதையாவாள், அம்பேத்கர் போல் 'டாக்டராகும்' தன் கனவு சிதைந்துவிடும் ஆகிய எண்ணங்கள் அவனுக்குள் ஓடியிருக்கலாம். இதில் ஏதோவொன்று பரியனைக் கத்தியைப் போட்டு கல்வியை கையிலெடுக்கசொல்லியிருக்கிறது.
ஒரு காட்சியில் சாதி வெறியர்களால் பரியன் பிரச்னையை சந்திக்கையில், அதே சாதியை சேர்ந்த நண்பன் ஆனந்த் "நான் சாதி பாத்தா லே உன்கிட்ட பழகுனேன்"என்று சொல்லும்போது பரியன் அவன் கையை உதறிவிட்டுச் செல்வான். ஏனென்றால், அந்த சாதி வெறியர்கள் கொடுத்த அச்ச உணர்வால் தன் நெருங்கிய நண்பனின் மீதே நம்பிக்கையை இழப்பான் பரியன். ஆனால் அதே பரியன் தன்னை கொலை செய்யவரும் சாதி வெறிக் கூட்டத்தை தன் மக்களைக் கண்டவுடன் எதிர்த்து நிற்பான்.(இக்காட்சியின் பின்னால் "நந்தன் இனமே பெறும் அரியாசனமே" என்று ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் காட்சி உணர்த்தும் கருத்தும் இதுவே).
ஆனந்த்தோடு இருக்கும் பரியன் vs தன் மக்களோடு இருக்கும் பரியன் தன் மக்களுடன் பரியன் இருக்கும்போது மட்டுமே முழுமையான பாதுகாப்பை உணர்வதுதான் இதற்குக் காரணம். ஆதிக்க சாதி நண்பன் ஆனந்த்துடன் இருக்கும் பரியனுக்கும், தன் மக்களோடு இருக்கும் பரியனுக்கும் உள்ள வேறுபாட்டின் உளவியலைப் புரிந்துகொண்டால், பொதுச்சமூகத்தில் தலித் மக்களைக் கலக்கவிடாமல் தடுப்பது எது என்ற புரிதல் ஏற்படும்.
படம் வெளியான நேரம், ஆதிக்கச் சாதி ஆனந்த் கதாபாத்திரம் நான்தான், சாதி பார்க்காமல் பழகுவேன் என்று சிலர் கூறினார்கள். ஆனந்த்களாக இருப்பதில் பெருமையில்லை...ஆனந்த்கள் ஆனந்த்களாகவே இருந்தால் பரியனும் பரியனாகவே இருப்பான். எப்போது ஆனந்த்கள் பரியனின் மனநிலைக்குள் புகுந்து பரியனாக மாறி யோசிக்கின்றார்களோ அப்போதுதான் சமூகத்தைப் பீடித்த சாதி நோய் அகலும்.இதனைத்தான் பரியேறும் பெருமாள் படமும் கூறுகிறது.
"ரூம்ல போய் தூக்கு போட்டு சாவுறதுக்கு, அவங்களோட சண்ட போட்டு சாவட்டும்", என்று கல்லூரி முதல்வர் ஒரு காட்சியில் கூறுவார். கல்லூரியில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் சாதியின் பெயரால் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், தாங்க முடியாமல் ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், பாயல் தத்வி போன்ற தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனை வலியுறுத்தும்விதமாகவே படத்தில் கல்லூரி முதல்வரின் பின்னால் வரும் வார்த்தைகள் இருக்கும்; " அவங்கள( ஆதிக்க சாதியினர்) உங்களால திருத்த முடியுமா...முடியாதுல அப்றம் இவன(பரியன்) மட்டும் ஏன் அடக்க பாக்றீங்க", இந்த வரி புரிந்தால் ஒடுக்கப்பட்டவனின் எழுச்சி ஒருபோதும் உங்களுக்கு சாதிவெறியாகவும் வன்முறையாகவும் தெரியாது. அவனின் வளர்ச்சி உங்களுக்கு எரிச்சலைத் தராது.
'இவன மட்டும் ஏன் அடக்க பாக்றீங்க' எப்போதும் அடித்துக் கொண்டிருப்பவனை நாம் கண்டும் காணாமல் சென்றுவிட்டு, அடி வாங்குபவன் திருப்பி அடித்தால், அய்யோ! இது வன்முறை சாதிவெறி என நாம் கத்தினால் பிரச்னை பரியன்களிடம் இல்லை நம்மிடம்தான் உள்ளது. இதைத் தான் பரியேறும் பெருமாள் படத்தின் இறுதிக் காட்சியில் பரியன் பேசும் வரிகளும் உணர்த்துகின்றன.
"நீங்க நீங்களா இருக்குற வரைக்கும், நான் நாயா தான் இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கற வரைக்கும்... இங்க எதுவுமே மாறாது'.