பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்ஆர்எஃப்) நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துள்ளது.
புதிய லோகோவை வெளியிடும் யாஷ் ராஜ் பிலிம்ஸ்! - யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டம்
மும்பை: யாஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்ஆர்எஃப்) தயாரிப்பு நிறுவனம் 50 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிய லோகோவை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த நிறுவனமானது மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தை அவரது மகனான ஆதித்யா சோப்ரா நிர்வாக இயக்குநராக இருந்து நிர்வகித்து வருகிறார்.
செப்டம்பர் 27ஆம் தேதி யாஷ் சோப்ராவின் 88ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நிறுவனம், 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை இந்த நிறுவனம் கோலாகலமாக கொண்டாட உள்ளது. அதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின் புதிய லோகோவை ஆதித்யா சோப்ரா அன்று வெளியிட உள்ளார்.
ஒய்.ஆர்.எஃப் ஏராளமான வரலாற்றைக் கொண்ட ஒரு பாரம்பரிய தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவுக்குப் பல சூப்பர் ஸ்டார்களை கொடுத்துள்ளது.
ஒய்.ஆர்.எஃப் 50 ஆண்டுகளாக பார்வையாளர்களை மகிழ்வித்துள்ளது. இது ஒரு பெரிய சாதனையாக கருதப்படுகிறது. எனவே, இந்த கொண்டாட்டத்தை முழு பாலிவுட் திரையுலகமே சிறப்பிக்க உள்ளது. இந்தப் புதிய லோகோவை வெளியிடுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அந்த நிறுவனம் நன்றியைத் தெரிவிக்க உள்ளது.