மும்பையிலுள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவில் உள்ள 'மணிகர்னிகா பிலிம்ஸ்' அலுவலகப் பகுதி விதிகளை மீறி கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி குற்றம் சாட்டியது. இது தொடர்பாக இரண்டு முறை நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மும்பை மாநகராட்சி கங்கனாவின் அலுவலகத்தை இடித்தது. இது ஜனநாயக மீறல் என கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மும்பை மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடிக்க மும்பை மாநகராட்சி ஆணையத்திற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிக அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, “மும்பை நகர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளது” என கங்கனா கூற, அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவை அவமதித்த கங்கனாவை மும்பைக்குள் வரக்கூடாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சூளுரைத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கங்கனாவின் அலுவலகம் இடிக்கப்பட்டதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.