குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத ஒருவரை குற்றம்சாட்டுவது தவறு - டாப்ஸி - லட்சுமி மஞ்சு
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ரியாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகைகள் லட்சுமி மஞ்சு, டாப்ஸி பண்ணு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு சுஷாந்தின் காதலி ரியாவும் அவரது குடும்பத்தினருமே காரணமென கூறி சுஷாந்தின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது.
இதனையடுத்து சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
அண்மையில் சுஷாந்தின் தந்தை கேகே சிங் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் ரியாதான் தனது மகனுக்கு விஷம் தந்து கொன்ற கொலையாளி என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ரியாவிடம் சிபிஐ அலுவலர்கள் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், சுஷாந்தின் மரணத்திற்கு ரியாவும் அவரது குடும்பத்தினருமே காரணம் என சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் அவரை குற்றவாளியாக சித்தரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரியாவுக்கு ஆதரவாக நடிகை லட்சுமி மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அக்கடிதத்தில், "ரியாவின் நேர்காணலை நான் முழுமையாக பார்த்தேன். இது குறித்து நான் பேச வேண்டுமா வேண்டாமா என்று யோசித்தேன். அந்தப் பெண்ணை ஒரு அரக்கி போல ஊடகங்கள் சித்தரித்துள்ளனர்.
எனக்கு நடந்த உண்மை என்னவென்று தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நேர்மையான வழியில் உண்மை வெளியே வரும் என நான் நம்புகிறேன்.
எனக்கு நம் நாட்டின் நீதி அமைப்பின் மீதும் சுஷாந்துக்கு நீதி பெற முயற்சித்து வரும் அமைப்புகள் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் அதுவரை உண்மை என்னவென்று தெரியாமல் ஒரு நபரையும் அவரது குடும்பத்தையும் தாக்கி அவர்களுக்குத் தீமையும் கொடுமையும் செய்யாமல் இருப்போம்.
ஊடகங்களின் இந்த விசாரணைகளில் அந்த மொத்த குடும்பமும் அனுபவிக்கும் வலி எப்படி இருக்கும் என என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. எனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் என் சக ஊழியர்கள் எனக்காக ஆதரவு தரவேண்டும். குறைந்தபட்சம் என்னை பற்றி தெரிந்தவர்கள் எனக்காக பேச வேண்டும் என எதிர்பார்ப்பேன்.
அதே தான் நான் இப்போது உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அவரை தயவு செய்து விட்டுவிடுங்கள். உண்மை அதிகாரப்பூர்வமாக வெளிவரும். அதுவரை காத்திருங்கள். நாம் எப்படி மாறி இருக்கிறோம் என்பதை பார்க்க எனக்கு வேதனையாக இருக்கிறது.
நமக்கு ஒரு குரல் இருக்கும் போது மனம் விட்டு பேச முடியாமல் போனால் நாம் எப்படி உண்மையாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியும். நான் என் சக ஊழியருக்கு ஆதரவு தருகிறேன்" என அக்கடிதத்தில் லட்சுமி மஞ்சு கூறியுள்ளார்.
இவரின் இந்த ட்வீட் பதிவை பகிர்ந்து இருக்கும் டாப்ஸி, "தனிப்பட்ட முறையில் எனக்கு சுஷாந்தையோ ரியாவையோ தெரியாது. ஆனால் நீதி அமைப்பைத் தாண்டி, குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத ஒருவரை குற்றம்சாட்டுவது எவ்வளவு தவறு என்பது எனக்குத் தெரியும். இதைப் புரிந்து கொள்ள மனிதத் தன்மை இருந்தால் அது போதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.