ஆடம்பர பங்களாவை விட்டு பெற்றோர் மீது கொண்டிருக்கும் அன்பால் பாந்த்ராவில் உள்ள ஃப்ளாட்டில் தங்கவிரும்புவதாக நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் ஆடம்பர பங்களாவில் வாழ்வதைக் காட்டிலும் பெற்றோருடன் சேர்ந்து வாழ விரும்பியே பாந்த்ரா ஃப்ளாட்டில் வசித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஆடம்பர பங்களாவில் வாழ்வதைக் காட்டிலும் பாந்த்ராவில் உள்ள ஃப்ளாட்டில் வாழவே அதிகம் விரும்புகிறேன். எனது குழந்தை பருவம் முதல் நான் இங்குதான் வாழ்ந்து வருகிறேன். இந்த முழு கட்டிடமும் எனக்கு ஒரு குடும்பம் போன்றது. நான் சிறியவனாக இருந்த போது இங்குள்ள தோட்டத்தில் விளையாடுவேன். சில சமயங்களில் அங்கேயே துங்கி விடுவேன்.
இந்த ஃப்ளாட்டில் இருக்கும் வீடுகள் அனைத்தும் எனது வீட்டைப் போன்றது. நான் இங்கிருக்கும் அனைவரின் வீடுகளிலும் சாப்பிட்டுள்ளேன். நான் இன்னும் இங்கே தங்கியிருக்கிறேன் என்றால் இந்த வீட்டுடன் எனது இதயம் இணைந்துள்ளது” என்றார்.
சல்மானின் தந்தையும் பழம்பெரும் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கூறுகையில், “நான் இந்த இடத்தோடு மிகவும் இணைந்துள்ளேன். இதை விட்டு நான் வெளியேறினால் எனது மனம் மிகவும் வேதனைப்படும். அதன் பிறகு நான் மகிழ்ச்சியாக வாழமுடியாது” என்றார்.