மும்பை : பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் திங்கள்கிழமை (ஜூலை 21) இரவு காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது செயலிகளில் ஆபாச படங்கள் பதிவேற்றியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் காவலர்கள் கைது செய்து செவ்வாய்க்கிழமை நீதிபதி முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இவருக்கு ஜூலை 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய மூன்று மாதங்கள் ஏன் என்பது குறித்து மும்பை இணை ஆணையர் (குற்றம்) தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ராஜ் குந்த்ரா மீது ஏப்ரல் மாதம் புகார் வந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் அவருக்கு எதிராக தீவிர விசாரணை நடத்திவந்தோம். இந்நிலையில் அவரின் கணக்கிற்கு சில சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் நடந்தன.
இந்த வங்கிக் கணக்குகளின் உண்மையான உரிமையாளர்கள் யார் யார் என்பது குறித்தும் விசாரணையில் இறங்கினோம். ராஜ் குந்த்ராவுக்கு வெளிநாடுகளிலிருந்தும் பணம் கிடைத்துள்ளது.
ஆபாச படங்கள் பார்க்க பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் கிடைத்த சந்தா பணம் மற்றொரு கணக்கு வழியாக எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்து கைது செய்துள்ளோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அரை குறை ஆடைகளுடன் ஆபாச படங்களில் நடித்துள்ள பெண்களுக்கு சம்பளமாக சில ஆயிரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன” எனறும் கூறப்பட்டுள்ளது.
ராஜ் குந்தாராவுக்கு எதிராக முதல் புகாரை இரண்டு பெண்கள் மால்வானி காவல் நிலையத்தில் அளித்தனர். அதன்பின்னர் லோனவாலா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ஆபாச படங்கள் Vs விபச்சாரம்: ராஜ் குந்த்ராவை கலாய்க்கும் இணையவாசிகள்