நடிகை பிரியங்கா சோப்ரா 2015ஆம் ஆண்டு பர்ப்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, உலகம் முழுவதுமுள்ள திறமைகளை கண்டறிந்து மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்கி வருகிறார். இதுதான் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ஜீவன் என்றும் கூறியுள்ளார்.
தற்போது அமேசானுடனான ஒரு கூட்டு முயற்சியில் பிரியங்கா இறங்கியுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், இந்தச் செய்தியை உங்களுடன் பகிர்வதில் மிகுந்த உற்சாகமும் பெருமையும் அடைகிறேன். கைவசம் நிறைய பணிகள் உள்ளன. அற்புதமான பார்ட்னர்களாக இருக்கும் ஜெனிபர் சால்கே உள்ளிட்ட அமேசான் அணியினருக்கு பெரிய நன்றி.
திறமையும், நல்ல படைப்பும் எந்த எல்லைக்கும் உட்படாதவை என்ற எனது நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒரு கதை சொல்லியாக சுவாரஸ்யத்தோடு சேர்ந்து மனங்களை, பார்வைகளை திறக்கும் புதிய சிந்தனைகளை தொடர்ந்து ஆராய்வதே எனது தேடல். எனது இந்த பயணத்தில் இதுநாள் வரை பெரிய பங்காக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.
தற்போது ஹாலிவுட்டில் பிஸியாக இருக்கும் பிரியங்கா, 'Baywatch', 'Isn't It Romantic' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படம் ஒப்பந்தங்களுக்கு முன்பே பிரியங்கா, ‘சிடாடெல்’, ‘சங்கீத்’ என்ற தொடரிலும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதில் ‘சங்கீத்’ தொடரை பிரியங்காவின் கணவர் நிக் ஜோனஸ் இணைந்து தயாரிக்கிறார். மேலும் நெட்பிளிக்ஸ் தயாரிப்பான 'வி கேன் பி ஹீரோஸ்', 'தி வைட் டைகர்' ஆகிய படங்களில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாது ‘மேட்ரிக்ஸ் 4’ திரைப்படத்திலும் பிரியங்கா சோப்ரா நடித்துவருகிறார்.