பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவிற்குப் பிறகு பாலிவுட்டில் ’நெப்போட்டிஸம்’ எனப்படும் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தும் போக்கிற்கு எதிராக மீண்டும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பல திரைப் பிரபலங்களின் குழந்தைகளும் நெப்போட்டிஸம் காரணமாகதான் திரைத் துறையில் நுழைந்திருக்கின்றனர் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவாதத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை கங்கனா ரனாவத் தொடங்கி வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போதைய நட்சத்திரங்கள் பலரும் நெப்போட்டிஸம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வரும் நிலையில், பாலிவுட்டில் முதல் ஹாலிவுட் வரை கோலோச்சி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா இது குறித்துப் பேசியுள்ளார்.
எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டில் சாதித்துக்காட்டிய சொற்ப நபர்களுள் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். பல முறை நெப்போட்டிஸம் குறித்த தனது கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில், தனக்கு வர வேண்டிய வாய்ப்பு எவ்வாறு திரைத்துறையில் தட்டிப் பறிக்கப்பட்டது என்றும், தான் அதை நினைத்து அழுததைக் குறித்தும் தற்போது பகிர்ந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தான் அளித்த பேட்டி ஒன்றில், ”நல்ல பெயர் பெற்ற குடும்பத்தில் பிறப்பதில் தவறு இல்லை. இந்தத் துறையில் வெளியாட்களுக்கு கதவைத் திறந்த உடன் வாய்ப்புகள் வந்து கொட்டுவதில்லை. நட்சத்திரக் குழந்தைகளுக்கு தங்கள் குடும்பங்களின் பெயரைக் காப்பாற்ற வேண்டிய அழுத்தம் உள்ளது. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனிப்பட்ட பயணம் உள்ளது. என் வாழ்க்கையில் நான் பலவற்றை சந்தித்தேன். வேறு யாரோ ஒருவர் தயாரிப்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்டதால், நான் படங்களில் இருந்து தூக்கி வீசப்பட்டேன். இதன் பின்னர் நான் அழுதிருக்கிறேன், ஆனால் மீண்டு எழுந்திருக்கிறேன். வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுபவர்கள் பலர், பல இடையூறுகளை சந்தித்து தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய பிரியங்கா, 'நெப்போட்டிஸமும் பாலிவுட்டும் கைகோர்த்துதான் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் அதையும் கடந்து சில நடிகர்கள் தங்களுக்கென்று ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டுள்ளனர். நானும் எனக்கென்று ஒரு பெயரை சம்பாதிக்க விரும்புகிறேன். ஆனால் அது மிகவும் கடினம். எனக்கு துறையில் யாரையும் தெரியாது. நான் திரைத் துறையில் நுழையும்போது எல்லாரும் எல்லாருடனும் நண்பர்களாய் இருந்தார்கள்.
நான் அதிகமாக பார்ட்டிகளுக்கு செல்ல மாட்டேன். சில ஆபத்தான முடிவுகளை எடுக்க பயப்பட மாட்டேன் என்பதை நம்பினேன். படம் பார்த்து முடித்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியேறுவோருக்கு எனது கதாபாத்திரம் தான் நினைவிருக்க வேண்டும், என் பெயர் அல்ல என்ற முடிவில் நான் கருத்தாய் இருந்தேன். நான் நடனம் கற்றுக் கொண்டேன், அதில் தேர்ந்து விட்டேன் என்று நம்பினேன்' என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :ஆன்லைனில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் 'கரோனா வைரஸ்'