ஆமீர் கான், கரீனா கபூர் இணைந்து நடித்துவரும் படம் 'லால் சிங் சத்தா'. இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கிவரும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மோனா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான 'Forrest Gump' படத்தின் இந்தி ரீமேக்காக இப்படம் உருவாகிறது.
கரோனா அச்சம் காரணமாக தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு பிரபலங்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். இதனையடுத்து ஆமீர் கான் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலத்தில் தான் நடித்த 'கயாமத் சே கயாமத் தக்' படத்தின் போஸ்டரை தானே சென்று ஆட்டோவில் ஓட்டிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஆமீர்கான் மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட், பணியில் அர்பணிப்பு போன்றவை ரசிகர்கள் பொதுவாக அறிந்த ஒன்றாகும். சமூகவலைத்தளத்தில் பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் பாப்பராசி புகைப்படக் கலைஞர் ஒருவர் 1988 ஆம் ஆண்டு ஆமீர்கான் நடிப்பில் வெளியான 'Qayamat Se Qayamat Tak (QSQT)' படத்தின் போஸ்டர் ஒன்றை அவர் தனது உறவினருடன் சேர்ந்து ஆட்டோவில் ஒட்டிய புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில் ஆமீர்கான் அவரது உறவினருடன் தானே மும்பை சுற்றியுள்ள பல ஆட்டோக்களிலும் 'Qayamat Se Qayamat Tak (QSQT)' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்குடன் போஸ்டரை ஒட்டிக்கொண்டிருந்தார் என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் இளம் ஆமீர்கானின் அர்ப்பணிப்பை வெகுவாக பாராட்டிவருகின்றனர்.