மும்பை: செல்வாக்கு மிகுந்த ஜனநாயகத்தில் அமைதியாகப் போராடிவரும் மாணவர்களுக்கு எதிராக நடந்த வன்முறை மிகவும் தவறானது என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
பாலிவுட் திரைப்பட நடிகையான பிரியங்கா சோப்ரா இது குறித்து தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
எல்லா குழந்தைகளுக்கும் கல்வி என்பது நமது கனவாக உள்ளது. அந்த கல்விதான் மாணவர்களை சுதந்திரமாக சிந்தித்து செயல்படவைக்கிறது. குரல் கொடுப்பதற்காகவே அவர்களை நாம் கல்வி மூலம் கற்பித்துள்ளோம்.
நன்கு செல்வாக்குமிக்க ஜனநாயகத்தில் அமைதியான முறையில் குரல் கொடுத்ததற்கு எதிராக வன்முறையில் சிக்கவைத்தது தவறானது. அனைவரது குரல்களும் இந்தியாவுக்கான மாற்றத்தை நோக்கிச் செயல்பட்டுகொண்டிருக்கின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் #Havevoicewillraise #Havevoicemustraise என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நிகழ்த்திய டெல்லி ஜமியா மில்லா இஸ்லாமியா, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தினர். இதில் பலர் பலத்த காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாலிவுட் பிரபலங்களான ஹிருதிக் ரோஷன், பிரணதி சோப்ரா, சித்தார்த் மல்கோத்ரா, ஃபரான் அக்தர், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டம் நிகழ்த்திவரும் மாணவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பிரியங்கா சோப்ராவும் மாணவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.