’அர்ஜூன் ரெட்டி’ என்ற ஒரே படத்தின் மூலம், தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து முடித்த ’லிகர்’ திரைப்படம், விரைவில் வெளிவர உள்ள நிலையில், பிரபல ’கல்ட்’ இயக்குநரும், சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் முன்வைத்து வருபவருமான ராம் கோபால் வர்மா, விஜய் தேவரகொண்டாவை வெகுவாகப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.
தனது ட்வீட்டில், ”பூரி ஜெகன்னாத் இயக்கி, கரண் ஜோஹர் வழங்கும் படம் ’லிகர்’. புலி, சிங்கம் ஆகியவற்றின் கலப்பு இனமான லிகர்(Lion+ Tiger)ஐத் தாண்டி, பவன் கல்யாண், மகேஷ், ரவிதேஜா, டைகர் ஷெராஃப் ஆகியோரின் அற்புதமான கலவையாக விஜய் தேவரகொண்டா தெரிகிறார்.
நான் கடந்த இருபது ஆண்டுகளில் பார்த்த எந்த ஒரு பெரிய நடிகரையும் விட விஜய் தேவரகொண்டா திரையில் ஜொலிக்கிறார். இந்த நடிப்பை வெளிக்கொணர்ந்த பூரி ஜெகன்னாத்துக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.