டாப்ஸியை தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்ட வித்யா பாலன் - வித்யாபாலனின் சகுந்தலாதேவி
மும்பை: நடிகை டாப்ஸிக்குப் பிறகு, வித்யா பாலன் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
கரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக இந்தியாவில் மார்ச் இறுதி வாரம் முதல் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துவித படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து திரைப் பிரபலங்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
இதனையடுத்து தற்போது மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை டாப்ஸி பன்னு படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக நேற்று (ஜூலை 7) தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.
இவரைத் தொடர்ந்து நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒப்பனை செய்து முடிக்கும்போது தனது குழுவினருடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், '#backtowork' என்று குறிப்பிட்டுள்ளார்.