'மிஸ் டிவா யுனிவெர்ஸ் 2015' பட்டம் பெற்று, 'மிஸ் யுனிவெர்ஸ்' போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இதன் பின் பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார்.
இவர், தற்போது அஜய் லோகன் இயக்கத்தில் 'வெர்ஜின் பானுப்பிரியா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஊர்வசியுடன் கெளதம் குலாட்டி, அர்ச்சனா புரான் சிங், டெல்னாஸ் இரானி, ராஜீவ் குப்தா, பிரிஜேந்திர கலா, நிகி அனேஜா வாலியா, ஹன்வந்த் காத்ரி, லலித் கிரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கின் முன்னணி இயக்குநரான சம்பத் நந்தி இயக்கும் 'பிளாக் ரோஸ்' எனும் படம் மூலம் ஊர்வசி தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படம் தெலுங்கு, இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து ஊர்வசி ரவுத்தேலா கூறுகையில், பிளாக் ரோஸ் திரில்லருக்கு அப்பாற்பட்ட படம். தெலுங்கு திரைப்பட அறிமுகத்திற்காக நான் காத்திருக்கிறேன். சம்பத் நந்தி மிகவும் புகழ்பெற்ற ஒரு இயக்குநர். இப்படத்தை முழு ஸ்கிரிப்டையும் என்னை மனதில் வைத்து எழுதியுள்ளார். இப்படத்தின் திரைக்கதையை மிகவும் நேசிக்கிறேன். மொழி ஒருபோதும் தனக்கு தடையாக இருந்ததில்லை. இதுபோன்ற நெருக்கடி காலத்தில் நான் தெலுங்கு திரைப்பட படத்தில் அறிமுகம் ஆவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஊர்வசி இதற்கு முன்பு கன்னட திரைப்படமான 'மிஸ்டர் ஏர்வதா' படத்திலும் நடித்துள்ளார். பிளாக் ரோஸ் படப்பிடிப்பிற்காக ஊர்வசி தற்போது ஹைதராபாத் வந்துள்ளார்.