ஒலிம்பிக் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனுடன் போட்டியிட்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வியடைந்தது. பிரிட்டன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் வரலாற்றில், இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
மைதானத்தில் கண்ணீர் சிந்திய பாரத மங்கைகள்
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோற்றதால் வீராங்கனைகள் மைதானத்தில் கண்ணீர் சிந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி பலரது மனதையும் பிசைந்தது.
கபீர் கானாக மாறிய ஷாருக் கான்
இந்திய மகளிர் அணியின் ஆட்டத்தைப் பாராட்டி, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டரில், "இதயம் உடைந்து விட்டது. ஆனால், நாம் தலைநிமிர்வதற்கான அனைத்துக் காரணங்களும் இருக்கின்றன.
இந்திய மகளிர் ஹாக்கி அணி நன்றாக விளையாடினீர்கள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரையும் நீங்கள் அனைவரும் ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள். இதுவே ஒரு வெற்றிதான்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 2007ஆம் ஆண்டு, வெளியான 'சக் தே இந்தியா' திரைப்படத்தில் ஷாருக் கான், இந்திய மகளிர் ஹாக்கி அணியை வழிநடத்தும் பயிற்சியாளராக 'கபீர் கான்' என்னும் வேடத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தைப்போல், நிஜத்திலும் இந்திய மகளிர் ஹாக்கி அணியை, தோல்வியின்போது உற்சாகப்படுத்திய நடிகர் ஷாருக் கானின் செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்தும்... துரத்தும் சாதிய வன்மம்