மும்பையில் 'உமாங்' காலண்டர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் சல்மான் கான், ஷாருக் கான், மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பார்வே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் கான், ஷாருக் கானுக்கு மும்பை காவல் துறையினர் காலண்டர் வழங்கினர். இதையடுத்து காவல் ஆணையர் சஞ்சய் பேசுகையில், "மும்பை காவல் துறையினர் மும்பைக்காரர்களைப் புரிந்துகொண்டு, நேசித்து அக்கறை காட்டுகிறார்கள். மும்பை பெருநகரின் பெரும்பகுதியை பாதுகாப்பதும் நிர்வகிப்பதும் கடினமான பணியாகும்.
இந்தக் காலண்டரில் பல வண்ணங்களில் இருக்கும் மும்பைக்காரர்களை மேல் இருக்கும் ஆண், பெண் மும்பை காவலர்கள் பாதுகாத்து சேவையாற்றுகின்றனர். 2020 காலண்டரில் புதிதாக, 'பெல்ஜிய மாலினாய்ஸ் ஸ்னிஃபர் நாய்கள், மவுண்டட் போலீஸ் யூனிட்' புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், ஜான்வி கபூர், கத்ரீனா கைஃப், சித்தாந்த் சதுர்வேதி, அனில் கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர். காவல் துறையினரின் அயராத முயற்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும்வகையில் 'உமாங்' விழா ஏற்பாடு செய்யப்பட்டது பாராட்டக்குரியது என்று பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பாண்டிராஜ் இல்ல விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது இவர்தானாம்?