ஹிந்தியில் தபாங், சிங் இஸ் கிங், சிம்பா, தமிழில் குத்து, அருந்ததி உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.
கரோனா ஊரடங்கில், மும்பையில் வேலைசெய்து வந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர், வேலையிழந்து, உணவு உறைவிடமின்றி திண்டாடி வருவதைப் பார்த்து மனம் வருந்திய இவர், கடந்த சில நாள்களாக அண்டை மாநில அரசுகளுடன் பேசி தன் சொந்த செலவில் சிறப்புப் பேருந்துகள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார்.
"புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு குடும்பத்தினருடன் நெடுஞ்சாலையில் நடந்து செல்வதைப் பார்த்து, நான் ஏசி அறையில் அமர்ந்து ட்வீட் செய்ய முடியாது. இவர்களுக்கு உதவுவதுதான் எனது முக்கியக் கடமை” என்று இதுகுறித்து அவர் முன்னதாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
சோனு சூட்டின் இந்தப் பணிகள் ஏற்கனவே நாடு முழுவதும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றிருந்த நிலையில், நெட்டிசன்கள் தற்போது மீம்ஸ்களை பகிர்ந்து வைரலாக்கி சோனு சூட்டை பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர்.
ட்விட்டர் மூலம் உதவி கோருபவர்களிடம் ’உங்கள் பைகளைத் தயார் செய்துகொள்ளுங்கள்’, ’உங்கள் அன்னையை கட்டி அணைக்கத் தயாராகுங்கள்’ ஆகிய வாசகங்களை சோனு சூட் அதிகம் உபயோகித்து வந்த நிலையில், இவற்றை மையப்படுத்தி மீம்ஸ்கள் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரியல் ஹீரோ எனும் பெயரில் சோனுவின் உதவிப்பணிகள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யபட்டன.
”அனைத்து நாயகர்களும் தொப்பிகள் அணிந்து காக்கி உடை அணிந்திருப்பதில்லை, அவர்களில் சோனு சூட்டும் ஒருவர்”, ”சோனு சூட், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான தடுப்பூசி” என நெட்டிசன்கள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க :'குடிபெயர்ந்த தொழிலாளர்களை மனிதர்களாகப் பாருங்கள்' - சோனு சூட் உருக்கம்