கரோனா பொது முடக்கம் காரணமாகப் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் திரும்ப, போக்குவரத்து வசதி செய்து கொடுத்து நற்பெயர் பெற்றவர் நடிகர் சோனு சூட். அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளை மூலம் அவர் வழங்கினார். கரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நிகழ்வு குறித்து புத்தகம் ஒன்றையும் சோனு சூட் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்துள்ளது. டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் பல கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனையடுத்து நாட்டில் கரோனா தொற்று மோசமடைந்துள்ள சில இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க நடிகர் சோனு சூட் முடிவெடுத்துள்ளார். இதற்கு தேவையான மூலப்பொருள்களை பிரான்ஸில் இருந்துஇறக்குமதி செய்து டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நிறுவும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சோனு சூட் கூறியிருப்பதாவது, "ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் பலர் சிரமப்படுவதைப் பார்த்து வருகிறோம். ஆக்ஸிஜன் தேவைப்படுவர்களுக்காக உற்பத்தி ஆலைகளைக் கொண்டு வருகிறோம். இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மருத்துவனைகளுக்கு மட்டும் உதவும் என்றில்லை. இவற்றை நிரப்பவும் முடியும்.
இதனால் கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் பிரச்னைகள் பெருமளவில் தீர்க்கப்படும். நேரம்தான் சவாலாக உள்ளது. அனைத்தும் விரைவில் வர வேண்டும். இனிமேலும் நாம் உயிர்களை இழக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதற்கட்டமாக அடுத்த பத்து நாள்களில் ஆக்ஸிஜன் ஆலை அமைக்கத் தேவையான பொருள்கள் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.