ஹிந்தியில் தபாங், சிங் இஸ் கிங், சிம்பா, தமிழில் குத்து, அருந்ததி உள்ளிட்ட பல வெற்றிபெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.
கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் மத்தியில், மும்பையில் வேலைசெய்து வந்த பிற மாநிலத் தொழிலாளர்கள் பலர், வேலை இழந்து, உணவு உறைவிடமின்றி திண்டாடி வந்த நிலையில், இவர்களைப் பார்த்து மனம் வருந்திய சோனு சூட், அண்டை மாநில அரசுகளுடன் பேசி தன் சொந்த செலவில் சிறப்பு பேருந்துகள் மூலம் இவர்கள் சொந்த ஊர்களுக்கு தற்சமயம் அனுப்பி வைத்து வருகிறார்.
சோனு சூட்டின் இந்த முயற்சிகளை திரைத்துறையினர் பலரும் பாராட்டி வரும் நிலையில், அவருடன் ’ஹேப்பி நியூ இயர்’ படத்தில் பணிபுரிந்த பிரபல இயக்குநர் ஃபரா கான் ”இதுபோன்ற பெருந்தொற்று பரவல் காலங்கள், நாம் யாருடன் நட்பைத் தொடர வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகின்றன” என மனம் நெகிழ்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் சோனு சூட்டை பாராட்டியுள்ளார்.
கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகளிடமிருந்து முறையாக அனுமதி பெற்று 10 சிறப்பு பேருந்துகளின் மூலம் இவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வரும் சோனு சூட், இதுபோன்ற இன்னல்களின்போது இந்தியர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்றும், கர்நாடகா, ஆந்திரா தவிர பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பவும் தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :களரி கற்கும் அதிதி ராவ்