கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடிகர் சோனு சூட் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இதுதவிர பலருக்கு மருத்துவ உதவி, ஏழை குடும்பத்துக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது என்று பல சேவைகளை செய்தார்.
அதுமட்டுமில்லாது மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், காவலர்களுக்கு முகக்கவசங்கள், வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்தது என தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்துள்ளார்.
இந்நிலையில் சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ.நா.மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.