'தோனி' பட நாயகன் சுஷாந்த் சிங் ஞயிற்று கிழமை (ஜூன்.14) மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். மன அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுவது ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மரணம் குறித்து சமூக வலைதளத்திலும், ஊடகத்திலும் சிலர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் இறப்பை சிலர் புகழ் தேடப் பயன்படுத்திக்கொள்வதாக நடிகை சேனாக்ஷி சின்ஹா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சோனக்ஷி தனது சமூக வலைதளப்பக்கத்தில், "பன்றிகளுடன் நீங்கள் சண்டையிட்டால் நீங்கள் அழுக்காகிவிடுவீர்கள். அவைகள் அதை ரசிக்கும். எங்கள் சகோதரர் இறந்துவிட்டார். அவரது மரணத்தின் காரணங்கள் குறித்து சிலர் இந்த நேரத்தில் வதந்தி பரப்பி விளம்பரம் தேட நினைக்கின்றனர். இதுபோன்ற எதிர்மறையான கருத்துகளை கூறுவதை முதலில் நிறுத்துங்கள்.
உங்களது வெறுப்பையும் மனதில் இருக்கும் நச்சுதன்மையையும் வெளிக்கொண்டுவர இது நேரமில்லை. இறந்தவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். ஒருவரின் மரணத்தை வைத்து நீங்கள் புகழ் தேடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.