டெல்லி: பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது, ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து பாலிவுட் நடிகரும், அரசியல் பிரமுகருமான சத்ருகன் சின்ஹா தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் அவர் சென்ற பாகிஸ்தான் பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சத்ருகன் சின்ஹா. இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர். ஆரிஃப் அல்வி, என்னை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. லாகூர் பயணத்தில் கடைசி நாளில் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவரது உபசரிப்பை கண்டு வியப்படைந்தேன்.
அவருக்கு மரியாதை செலுத்தியதுடன், கொஞ்ச நேரம் அவருடன் சமூக மற்றும் கலாசார பிரச்னைகள் குறித்து பேசினேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. எனவே இதை நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்நிய மண்ணில் நாட்டின் அரசியல் அல்லது நாட்டின் கொள்கைகள் குறித்த அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத ஒருவர் பேசமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரபல தொழிலதிபர் மியான் அசாத் இஷான் என்பவரின் இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்காக லாகூர் சென்ற சத்ருகன் சின்ஹா, அதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.