ஹைதராபாத் : பாடகி நடிகை என ஹாலிவுட்டில் வலம்வரும் செலினா கோம்ஸ், மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துக்கு சொந்தக்காரர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட் பிரைரி என்ற இடத்தில் 1992ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி பிறந்தவர் செலினா.
செலினாவின் ஆரம்ப கால திரைத்துறை வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுந்து வழங்கினார். அதன்மூலம் கிடைத்த புகழில் நிதானமாக முன்னேறினார்.
இவரின் வாழ்வில் பார்னி அண்ட் ப்ரண்ஸ்ட் (Barney & Friends) தொலைக்காட்சி தொடர் திருப்புமுனையாக அமைந்தது. குழந்தைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இத்தொடர் 2002-2004 காலகட்டங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் கிடைத்த புகழின் மூலம் சின்னத்திரை தொடர்களிலிருந்து சினிமாத்துறைக்குள் நுழைந்தார். தொடர்ந்து 2008இல் அனெதர் சிண்ட்ரெல்லா ( Another Cinderella), 2009களில் பிரின்ஸஸ் புரோடக்ஸன் புரோகிராம் ( Princess Protection Program), விஸார்ட்ஸ் ஆஃப் வேவர்லி த மூவி (Wizards of Waverly Place: The Movie), 2010இல் ரமோனா அண்ட் பீஸூஸ் ( Ramona and Beezus ) என வெற்றி படங்களை கொடுத்தார்.
செலினா கோம்ஸ் சினிமா மட்டுமின்றி பாடகியாகவும் வலம்வருபவர். இவரின் பாடல்களை கேட்க இளசுகள் தவம் கிடைந்த காலங்களும் உண்டு. 2015ஆம் ஆண்டு தனது பிறந்த தினத்தில் குட் பார் யூ என்ற ஆல்பத்தை வெளியிட்டார்.