மும்பை: சினிமா பாணியில் நிஜக் கதை ஒன்று நிகழ்வதற்கு காரணமாகியுள்ளார் நடிகை சாரா அலி கான். வீட்டிலிருந்து காணாமல்போன சிறுவன் இவரது வைரலான புகைப்படத்தில் எடுத்துக்கொண்ட செல்ஃபி மூலம் கண்டறியப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பள்ளி சென்று வீடு திரும்பாத சிறுவன்
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வரூப் என்பவர் அங்குள்ள பேகம்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி பள்ளிக்குச் சென்று தனது மகன் அஜய் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. எனவே காணாமல்போன தனது மகன் அஜய்யை கண்டுபிடித்துத் தருமாறு கூறியிருந்தார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த 17 வயது சிறுவன் அஜய்யை, நடிகை சாரா அலி கானின் வைரல் வீடியோவில் அவனது உறவினர்கள் கண்டறிந்துள்ளனர். பின்னர் இதுபற்றி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து சிறுவன் அஜ்ய்யை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.