பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராதே'. இதில் சல்மான் கானுடன் மேகா ஆகாஷ், திஷா பதானி, பரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'வெடரன்' என்னும் தென்கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த ரம்ஜான் தினத்தன்று திரையரங்கில் இப்படம் வெளியாகவிருந்த நிலையில், கரோனா தொற்று அச்சம் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இந்த நிலையில், இந்தாண்டு ரம்ஜான் வெளியீடாக இந்தப் படம் ஓடிடி தளமான 'ஜீ 5' இல் மே 13ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்தப் படத்தை, ஓடிடி தளத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் நாளில் பார்த்துள்ளதாக ஜீ 5 தெரிவித்துள்ளது.
இதற்கு சல்மான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள். முதல் நாளில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற பெருமையை ராதேவுக்கு தந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் திரைத்துறை பிழைக்காது நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
ஆனால், ஓடிடியில் முதல் நாளில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என 'ராதே' சாதனைப் படைத்தாலும், ஐஎம்டிபி என்னும் திரைப்படங்களை மதிப்பிடும் இணையதளத்தில் 'ராதே' படம் 2.1 / 10 மதிப்பீடைப் பெற்றுள்ளது. இது சல்மான் கான் நடிப்பில் வெளியான படங்கள் பெற்றதில் இரண்டாவது குறைவான மதிப்பீடு ஆகும். முதலாவதாக சல்மான்கான் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான 'ரேஸ் 3' திரைப்படம் 1.9 / 10 மதிப்பீட்டைப் பெற்றது.
’ஐஎம்டிபி’யில் குறைந்த மதிப்பீடுகளைப் பெற்ற ’ராதே’
உலகம் முழுவதும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பத்து மதிப்பெண் அளவில் வாடிக்கையாளர்கள் வழங்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்த ஐஎம்டிபி (IMDb) இணையத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ராதே திரைப்படம் 43,398 வாக்குகள் பெற்று 2.1 / 10 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது' ராதே' படக்குழுவினர் மத்தியிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.