சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இதில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் ஜனவரி 13ஆம் தேதி வெளியான இப்படம் வசூலில் சாதனைபுரிந்தது. அதுமட்டுமல்லாது நீண்ட மாதங்களாகத் திரையரங்குகளில் பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், 'மாஸ்டர்' வெளியாகி திரையரங்குகளை மீட்டது.
இதற்கிடையில், படம் திரையரங்கில் வெளியாகி குறைந்த நாள்களிலேயே ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியானது. இருப்பினும் குறைந்த நாளில் இந்தப் படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்து பாக்ஸ் ஆபீஸில் சாதனைபுரிந்தது.
தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பாலிவுட்டில் போட்டிப்போட்டு-வருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் உரிமை முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியில் டப்செய்யப்பட்டு மாஸ்டர் வெளியானாலும் இந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி கதாபாத்திரமான பவானிக்குத் தகுந்த நடிகரைத் தேடிவருகின்றனர்.
மாஸ்டர் படத்தைப் பார்த்த சல்மான் கான் அந்தப் படம் மிகவும் பிடித்துப் போய்விட்டதாக ஏற்கனவே பாலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வலம்வந்தன. 'மாஸ்டர்' படத்தில் சல்மான் கான் நடிக்கும்பட்சத்தில் இவர் விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். முன்னாதாக விஜயின் 'காவலன்' படத்தின் இந்தி ரீமேக்கான 'பாடிகார்டு' (Bodyguard) கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.