பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் (53) இன்று புற்றுநோயால் உயிரிழந்தார். தனது பன்முகத் திறமையால் ரசிகர்களாலும், சினிமா விமர்சகர்களாலும் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்றவர். குறிப்பாக தி லஞ்ச் பாக்ஸ், பான் சிங் தோமர் போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
அவரது மறைவு பாலிவுட் வட்டாரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில், இவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் அவர், இர்ஃபான் கான் உயிரிழந்த செய்தியை கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவர் இறுதியாக நடித்த அங்ரெசி மீடியம் உட்பட அவரது பெரும்பாலான திரைப்படங்களை நான் பார்த்துள்ளேன். அவருக்கு நடிப்பு எந்த ஒரு சிரமமுமில்லாமல் சர்வசாதாரணமாக வரும். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், இர்ஃபான் கான் அற்புதமான திறமை கொண்டவர். தனது வெர்சடைல் நடிப்புத் திறன் மூலம் அனைவரது இதயத்தையும் கவர்ந்தார். அவர் மறைந்த செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஈரானில், வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள சாராயம் அருந்திய 728 பேர் உயிரிழப்பு!